“சந்திரமுகி 2” படத்தில் மொத்தம் 10 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி தெரிவித்துள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு மலையாள திரைப்படமான ‘மணிச்சித்திரதாழ்’ திரைப்படத்தின் ரீமேக்காக உருவான ‘சந்திரமுகி’ திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் தமிழில் வெளியானது. படம் வெளியாகி 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி மாபெரும் வெற்றி பெற்று வசூலையும் அள்ளி குவித்தது.
இந்நிலையில், 13 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். மேலும் படத்தில் ராதிகா, வடிவேலு, லக்ஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ரவிமரியா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மேலும், இதில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 படத்தின் “சுவாகதாஞ்சலி” பாடலில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைதுள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். முதல் பாகத்தின் தொடர்பு ஏதும் இல்லாமல் புதிய கதையாக உருவாகி வரும் இத்திரைப்படம் தெலுங்கில் வெளியான “நாகவள்ளி” திரைப்படத்தின் தழுவலாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
சமீபத்தில், படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் புகைப்படத்தை வெளியிட்டு “சந்திரமுகி 2” படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்றும் அறிவித்தனர். அண்மையில் வெளியான படத்தின் முதல் பாடலான “சுவாகதாஞ்சலி” பாடலில் ஒரு சில மேக்கிங் வீடியோ காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், படத்தின் அடுத்த அப்டேட்டாக இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
“சந்திரமுகி – 2 படத்தில் எனக்கான இசைப்பணிகள் முடிந்தது. மீதமுள்ள 9 பாடல்களை வெளியிடுவதில் ஆவலுடன் இருக்கிறோம்’ என பதிவிட்டுள்ளார். இதிலிருந்து படத்தில் மொத்தம் 10 பாடல்கள் உள்ளது என்பது உறுதியாகியுள்ளது.