குஜராத் மாநிலத்தில், உணவகம் ஒன்று கல்லறைகளுக்கு (graves) நடுவே அமைத்திருக்கும் வினோதம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தின் லால் தர்வாசா பகுதியில் அமைந்துள்ள நியூ லக்கி என்ற உணவகம் கல்லறையின் (graves) நடுவே அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உணவகம் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது எனவும் கூறுகின்றனர்.
இத நியூ லக்கி உணவகத்தின் உரிமையாளர் கிருஷ்ணன் குட்டி முதலில், உணவகம் தொடங்க ஒரு இடத்தை வாங்கியுள்ளார். இதனையடுத்து நேரில் சென்று பார்த்தபோது தான் அது ஒரு கல்லறை என்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், அவரிடம் அதிக பணம் இல்லாத சூழல் காரணமாக தொழில் செய்ய நிலம் கிடைப்பதே பெரிது என்று அந்த நிலத்தையே வாங்கி விட்டார். பின்னர், இந்த கல்லறைகளையே தனது தொழிலின் யுத்தியாக மாற்ற நினைத்த அவர் கடையை கட்ட இந்த கல்லறைகளை இடிப்பதற்கு பதிலாக இதை சுற்றி கட்டினால் என்ன என்று எண்ணி, அதன்படியே கல்லறைகளை விட்டுவிட்டு அதை சுற்றி மக்கள் அமர்ந்து உண்ணும் மேசைகளை அமைத்தார்.
பின்னர், அவர் சோசித்தது போலவே வியாபாரம் சூடு பிடிக்கத் துவங்கியது. கல்லறைகள் இருந்தாலும் எந்த தயக்கமும் இன்றி மக்கள் சகஜமாக இங்கு அமர்ந்து சாப்பிட பழகிவிட்டனர். குறிப்பாக, அந்த கடையில் இதுவரையிலும் எந்த அமானுஷ்ய நிகழ்வுகளோ, வித்தியாசமான உணர்வுகளோ ஏற்படவில்லை எனவும் கூறுகின்றனர்.
மேலும், இந்த உணவகத்திற்குள் சுமார் 24 கல்லறைகள் இருப்பதாகவும், இந்த கல்லறைகள் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சில சூஃபி துறவிகளுக்கு சொந்தமானது என்றும் உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள்.
அந்த உணவகத்தில், இறந்தவர்கள் கல்லறையை யாரும் மிதிக்காதபடி கல்லறைகளைச் சுற்றி இரும்புக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், இங்குள்ள பணியாளர்கள் இந்த கல்லறைகளை தினமும் சுத்தம் செய்து தினமும் புதிய மலர்களால் அலங்கரித்து மரியாதை செய்வது மிகவும் முக்கியம் என்று அவர்கள் நம்புகிறார்கள். மேலும், இந்த கடைக்கு பிரபல ஓவியர் எம். எப். ஹுசைன் அடிக்கடி வருவார் எனவும், அவரது ஓவியங்களையும் இந்த கடையில் மாட்டியுள்ளனர் எனவும் கூறுகின்றனர்.