ஆஸ்திரேலியா(australia citizenship) நாட்டில் குடியுரிமை வழங்க வேண்டி நெடும்பயணம் மேற்கொண்டுவரும் சகோதரிகளின் கோரிக்கைகள் வெல்ல நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..
ஆஸ்திரேலியா நாட்டில் பல ஆண்டுகாலமாக வாழும் தமிழர் உள்ளிட்ட பல்வேறு தேசிய இன மக்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்நாட்டு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மெல்பேர்ன் நகரிலிரிருந்து தலைநகர் கான்பெரா நோக்கி 650 கிமீ தூரம் 22 பெண்கள் மேற்கொண்டுள்ள நடைபயணம் முழுமை பெறவும், கோரிக்கைகளை வென்றெடுக்கவும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தாயக விடுதலைப் போரில் உறவுகளை இழந்து, உடைமைகளை இழந்து இந்த பூமிப் பந்தில் நிம்மதியாக வாழ இடம் தேடி அலைந்தபோது, அன்னை மடிபோல் அரவணைத்து, அடைக்கலம் அளித்ததோடு தன் நாட்டு மக்களுக்கு இணையாக உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கி அனைத்து வசதி வாய்ப்புகளோடு வாழ வைத்த பெருமைக்குரியது ஆஸ்திரேலியா திருநாடு. தமிழர்களுக்கு இன்னொரு தாய்மடியாய் விளங்கும் ஆஸ்திரேலியா நாட்டிற்கு தமிழ் மக்கள் என்றென்றைக்கும் நன்றிக்குரியவர்களாக இருந்து வருகின்றனர்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஸ்திரேலியா நாடு, அகதி என்ற அடையாளத்தை சுமந்து சுமையோடு வாழ்ந்து வரும் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தேசிய இன மக்களுக்கும் குடியுரிமை, அயல் நாட்டு நுழைவுச்சான்று உள்ளிட்ட உரிமைகள் வழங்கிதன்மானத்தோடு வாழ வழிவகை செய்து அவர்களின் நீண்டகாலத் துயரினைத் துடைத்திட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழர்கள் மட்டுமல்லாது அனைத்து இன மக்களின் துயர் நீங்கவும், நீண்ட தூர நடைபயணம் மேற்கொண்டுள்ள அன்பிற்குரிய சகோதரிகள் அனைவருக்கும் எனது புரட்சிகர வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.