திருச்சி மாவட்டம் துறையூரில், டியூசன் பயில வந்த 16 வயது சிறுவனுக்கு தனியார் பள்ளி ஆசிரியை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கணக்கு ஆசிரியை போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள (teacher arrested) சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துறையூர் அருகே உள்ள வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 43 வயதாகும் தேவி என்ற பெண் துறையூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தற்போது அவர் சித்திரப்பட்டி என்ற பகுதியில் தங்கி இருந்து டியூஷன் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதே பள்ளியில் படிக்கும் துறையூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் கணக்கு ஆசிரியையான அந்த பெண்ணிடம் டியூசன் சென்று வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று வழக்கம் போல 16 வயது சிறுவன் டியூசன் சென்ற போது அந்த ஆசிரியை சிறுவனை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, வீட்டிற்கு வந்த அந்த சிறுவன் இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணக்கு ஆசிரியை தேவி மீது பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் கணக்கு ஆசிரியை தேவியை போக்சோ வழக்கில் கைது செய்து (teacher arrested) திருச்சி மகளிர் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், டியூசன் சென்ற சிறுவனை ஆசிரியை பாலியல் தொந்தரவு செய்த நிலையில், அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.