மாநிலங்களவை இடைத்தேர்தல் வேட்பாளராக கோவா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான லூய்சின்ஹோ பலேரோவை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய லூய்சின்ஹோ கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவரை ராஜ்யசபா வேட்பாளராக அறிவித்ததன் மூலம் மேற்கு கடலோர மாவட்டமான கோவாவில் திரிணமூல் காங்கிரஸ் தனது கால் தடத்தை பதிக்க முயற்சிக்கிறது.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பியாக இருந்த அர்பிதா கோஷ் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி ராஜினாமா செய்துவிட்டதால் அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வரும் நவம்பர் 29ஆம் தேதி ராஜ்யசபா இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்காக கோவா முன்னாள் முதல்வராக இருந்த லூய்சின்ஹோ பலேரோவை ராஜ்யசபா வேட்பாளராக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் லூய்சின்ஹோ பலேரோவை மாநிலங்களவைக்கு அனுப்புவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். தேசத்தின் நலனுக்காக அவரது முயற்சிகள் என்னென்றும் மக்களால் பரவலாக பாராட்டப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என டிவிட்டரில் தெரிவித்துள்ளது.
கோவா சட்டசபை தேர்தல் 2022 ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இங்கு பாஜகவுக்கு மாற்றாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனது இருப்பை காட்டிக் கொள்ள முயற்சித்து வருகிறது. இதற்காக அக்டோபர் மாதம் கோவாவுக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி கோவாவுக்கு வந்திருந்தார்.
அப்போது மம்தா முன்னிலையில் பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகாங்கிரஸில் இணைந்தார். அது போல் பிரபல நடிகை நசீப் அலியும் அக்கட்சியில் இணைந்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் கோவா தேர்தலில் லியாண்டர் பயஸ் முதல்வர் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரம் தெரிவிக்கின்றது.
ஆனால் கோவா முன்னாள் முதல்வர் லூய்சின்ஹோவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. கோவா மட்டுமல்லாமல் திரிபுரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் காங்கிரஸ் முக்கிய தலைவர்களை திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகாங்கிரஸ் தன் பக்கம் இழுத்து வருவதாக கூறப்படுகிறது.