தமிழ்நாட்டை மீளாத்துயரில் ஆழ்த்திய ஆழிப்பேரலையின் 19-ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று, சுனாமியால் உயிரிழந்தோரை நினைவில் ஏந்தி, காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ளும் ஆக்கபூர்வமான திட்டங்களுடன் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை உருவாக்குவோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதே நாள் (டிசம்பர் 26) 19 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி என்னும் ஆழிப்பேரலை 30 மீட்டர் உயரத்துக்கு கடலில் எழுந்து 14 நாடுகளில் கடலோரப் பகுதிகளில் கோரத் தாக்குதல் ஏற்படுத்தியது.
அதன்படி இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்பட 14 நாடுகளில் கரையோரம் இருந்த 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 மக்கள் ஆழிப்பேரலையின் சீற்றத்தில் சிக்கி மாண்டு போனார்கள். மேலும், 43 ஆயிரத்து 786 பேர் காணாமல் போனார்கள்.
தமிழகத்தில் இந்த சுனாமி தாக்குதலில் சென்னை முதல் குமரி வரை கிழக்கு கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர்.
இந்த நிலையில் சுனாமி தாக்குதலின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில், “பல்லாயிரம் பேரின் வாழ்வைப் புரட்டிப் போட்டு, தமிழ்நாட்டை மீளாத்துயரில் ஆழ்த்திய ஆழிப்பேரலையின் 19-ஆம் ஆண்டு நினைவு தினம்.
சுனாமியால் உயிரிழந்தோரை நினைவில் ஏந்தி, காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ளும் ஆக்கபூர்வமான திட்டங்களுடன் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை உருவாக்குவோம். அதன் முதல்படியாக இயற்கையைக் காக்க உறுதியேற்போம்.” என பதிவிட்டுள்ளார்.