தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய விசாரணைக் கைதி விக்னேஷ் கொலை வழக்கில் 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கெல்லீஸ் சந்திப்பில் கடந்த 18-ம் தேதி இரவு 11:30 மணியளவில் தலைமைச் செயலக காலணி காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ், பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் ஆட்டோவில் வந்துள்ளனர். போலீஸ் சோதனை செய்ததில் கஞ்சா, மது பாட்டில்கள், கத்தி உள்ளிட்ட பொருட்கள் இருபத்தைக்கண்டு அவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மறு நாள் காலையில் திடீரென விக்னேஷ்-க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் போலீஸார் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு விக்னேஷ் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த விசாரணைக் கைதி மரணம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்காவல் படை தீபக் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனைத் தொடந்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணையைத் தீவிரப்படுத்திய சி.பி.சி.ஐ.டி விக்னேஷின் சந்தேக மரணம் வழக்கில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர்கள் எனத் தலைமைச் செயலக காலணி காவல் நிலையத்தில் பணிபுரிந்த 12 பேரை விசாரணை வளையத்தில் கொண்டு வந்திருக்கிறது.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணி முதல் நள்ளிரவு தாண்டி விசாரணை நீடித்த நிலையில், காவலர் பவுன்ராஜ் காவல்நிலைய எழுத்தாளர் முனாஃப் ஆகியோரை விக்னேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்த்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்தனர்.