நடிகர் பார்த்திபனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் கடந்த 2019ம் ஆண்டில் கோல்டன் விசாவை அறிமுகப்படுத்தியது. இந்த விசா 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். இந்த கோல்டன் விசா வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள், ஒரு தேசிய ஆதரவாளரின் தேவையின்றி, அந் நாட்டில் தங்கவும் படிக்கவும், பணிபுரியவும் முடியும் என்பதுடன் இந்த விசாவை வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் குடிமகன் போலவே கௌரவிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் இந்த விசாக்கள், தானாகவே புதுப்பிக்கப்படும் என்பதும் குறிப்பிடப்படுகிறது. அங்குள்ள அரசாங்கம், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறன் கொண்ட மாணவர்கள், அறிவியல் மற்றும் அறிவியலின் பல்வேறு துறைகளில் சிறப்பான திறன் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு கோல்டன் விசாக்கள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் கடந்த சில மாதங்களாக இந்திய திரையுலக நட்சத்திரங்கள் சிலருக்கு கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. அதன் வரிசையில் முதல் முறையாக தமிழ் நடிகர் பார்த்திபனுக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது.
இதுகுறித்து நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை திரிஷாவுக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கௌரவித்திருந்தது. இதன் மூலம் கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை பெற்றிருந்தார். அந்த வரிசையில் கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பார்த்திபன் பெற்றுள்ளார்.