போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெறவுள்ள வாகோ உலக கிக்பாக்சிங் போட்டியில் இந்தியா சார்பில் களமிறங்கும் தமிழக வீரர் வீராங்கனைகளை நேரில் அழைத்து அமைச்சர் உதயநிதி வாழ்த்து கூறியுள்ளார்.
உலகில் எந்த மூலையில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றாலும், தமிழ்நாட்டு வீரர்களின் வெற்றிச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து உறுதிபடுத்தும் விதமாக, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் தமிழக வீரர் – வீராங்கனையருக்கு பல்வேறு உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது

அவ்வகையில், போர்ச்சுக்கல் நாட்டில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள வாகோ உலக கிக்பாக்சிங் (சீனியர் & மாஸ்டர்) போட்டியில், இந்தியா சார்பில் கலந்து கொள்ளவிருக்கிற தமிழ்நாட்டின் 8-வீரர் வீராங்கனையருக்கு, விமானக் கட்டணம், தங்குமிட செலவினம் மற்றும் போட்டிக்கான நுழைவுக் கட்டணமாக ரூ 1.50 லட்சம் வீதம் ரூ 12 லட்சத்திற்கான காசோலையினை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து அமைச்சர் உதயநிதி வழங்கினார்.

இதையடுத்து சர்வதேச போட்டிக்கு தேர்வானதற்காக வீரர் வீராங்கனைகளை பாராட்டியதோடு, பதக்கங்களை குவித்து நாட்டிற்கும் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி வாழ்த்தினார் .