எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும் என விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
உழவுக்கு துணை நிற்கும் காளைகளுக்கும் – தமிழர்களுக்குமான உறவின் அடையாளமாகவும், பாரம்பரிய வீர விளையாட்டாகவும் திகழும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த தடையில்லை என உச்ச நீதிமன்ற தீர்ப்பைப் பெற்று தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டி, ஜல்லிக்கட்டு பேரமைப்புகளின் சார்பில் புதுக்கோட்டையில் நேற்று மாபெரும் நன்றி அறிவிப்பு விழா நடைபெற்றது .
இந்த விழாவில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் அவருக்கு காளை பொறித்த செங்கோல் கொடுத்து கவுரவிக்கப்பட்டது .
இதையடுத்து பேசிய அமைச்சர் உதயநிதி கூறியதாவது :
“ஜல்லிகட்டு குறித்து வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஒரு புறம் அதிமுக கொண்டாடி வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதைத்ததே அதிமுக ஆட்சியில் தான் என்பது அனைவர்க்கும் நன்றாக தெரியும் . எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் மாணவர்கள் களத்தில் இறங்கி இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டனர் .
டிசம்பர் 2016 இல் வெறும் 5 பேரில் ஆரம்பித்த இந்த போராட்டம் ஜனவரி 2017 முதல் வாரத்தில் உலக முழுவதும் காட்டுத்தீயை போல் வேகமாக பரவியது. மெரினாவில் ஒட்டுமொத்த தமிழ்நாடே திரண்டு நின்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களத்தில் நின்றது .
ஜல்லிக்கட்டு போராட்டம் மட்டுமல்ல எந்த ஒரு போராட்டத்தையுமே அதிமுக ஆட்சியில் இருந்தபோது முறையாக கையாளவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை , அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டமாக இருந்தாலும் ஹைட்ரோ கார்பன் போராட்டமாக இருந்தாலும் அந்தந்த போராட்டங்களை எப்படி அதிமுகவினர் கையாண்டனர் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும் .
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அனைத்து தொகுதியிலும் பாஜகவை ஓட ஓட விரட்டினார்கள். அடுத்த ஆண்டு நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பாஜகவை ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும். 2021ல் அடிமைகளை விரட்டி அடித்தோம் வருகின்ற 2024ல் அடிமைகளின் எஜமானர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்”.