ஆன்லைனில் ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு ரூ.200 சாக்லேட் பார்சல் வந்ததால் அதிர்ச்சி..!

Spread the love

ஆன்லைனில் ஐபோன் ஆர்டர் செய்த ஒருவருக்கு ரூ.200 சாக்லேட் பார்சல் வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் லீட்ஸ் பகுதியைச் சேர்ந்த டேனியல் கரோல் என்பவர் சமீபத்தில் ஒரு ஆன்லைன் தளத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான ஐ-போன் 13 பிரோ மேக்ஸ் போனை ஆர்டர் செய்துள்ளார்.

அந்த போனின் பார்சல் இரண்டு வாரங்கள் தாமதமாக வந்துள்ளது. அதுவரை அவர் பல முறை அந்த ஆன்லைன் தளத்தை தொடர்பு கொண்டுள்ளார். இருப்பினும் இறுதியாக கடந்த வாரம் அவர் ஆர்டர் செய்த பொருள் அவர் வீட்டிற்கு வந்துள்ளது.

தான் ஆர்டர் செய்த ஐ-போனை பார்க்க ஆவலாக இருந்த அவருக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. அதாவது அந்த பார்சலில் ஐபோன் 13 பிரோ மேக்ஸிற்கு பதிலாக இரண்டு டேரி மில்க் ஓரியோ சாக்லேட் இருந்துள்ளது. அதை பார்த்து அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதன்பின்னர் மீண்டும் டெலிவரி நிறுவனத்தை தொடர்பு கொண்டு தன்னுடைய புகாரை அளித்துள்ளார். அவர்கள் அதன் பின்பு இந்த பொருளை விற்ற நிறுவனத்திடமும் முறையிட்டுள்ளனர். தற்போது இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

இது குறித்து டேனியல் கரோல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது;

https://twitter.com/Daniel_James201/status/1473248188551380997?s=20

பல வாரங்களுக்கு பிறகு நான் ஆர்டர் செய்த பார்சல் எனக்கு வழங்கப்பட்டது. ஆனால் அந்த பார்சலில் நான் ஆர்டர் செய்த ஐ -போனுக்கு பதில் எனக்கு கிறிஸ்துமஸ் பரிசாக சாக்லேட் வந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தியாவில் ஒருவர் ஐபோன் ஆர்டர் செய்த போது அவருக்கு சோப்பு ஒன்று பார்சலில் வந்தது. அந்தச் சம்பவம் பெருமளவில் வைரலானது. அதற்கு பின்பு தற்போது மீண்டும் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Spread the love
Related Posts