ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று டெல்லி திரும்பினார். அமைச்சர் முருகன் தனது பயணத்தின் முதல் நாளான நேற்று குல்காமில் மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து குல்காமில் அவர் பேசுகையில்,
“ஜம்மு-காஷ்மீரின் முழுமையான வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. குல்காம் மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. குல்காமில் 3,200 சுய உதவிக்குழுக்கள் உள்ளன. இதன் மூலம் பல்வேறு துறைகளில் 54,000 வேலை வாய்ப்புகள் உருவாகி பொருளாதாரம் வளரும்’’ என்றார்.
அமைச்சர் முருகன் உள்ளூர் மீன் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்பகுதியில் உள்ள மீன் பண்ணைகளையும் பார்வையிட்டார். அப்போது, உள்நாட்டு மீன் வளர்ப்புக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், இத்தொழிலில் ஈடுபடுவோர் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்றார்.
அகர்பாலில் அதிநவீன நடமாடும் கால்நடை பராமரிப்பு வாகனத்தை எல்.முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மோடர்காமில் அதிக விளைச்சல் தரும் ஆப்பிள் பண்ணையையும் அவர் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து இப்பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கிய அமைச்சர், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக பிராந்தியத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வலியுறுத்தினார்.