பிப்ரவரி 6-ந் தேதி முதல் காணொலி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள் 137 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இன்று இதன் மீது பரிசீலணை நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரத்தை வேட்பாளர்கள் தொடங்கி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் களம் காணும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிப்ரவரி 6-ந் தேதி முதல் காணொலி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார். உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி என்ற முழக்கத்துடன் இந்த காணொலி பிரசாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்கிறார்.

தேர்தல் பரப்புரைகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், நாளை தொடங்கி பிப்ரவரி 17வரை மாவட்ட வாரியாக பரப்புரை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 6-ல் கோவை, பிப்.7-ல் சேலம், பிப்.8-ல் கடலூர், பிப். 9-ல் தூத்துக்குடி, பிப்.10-ல் ஈரோடு, பிப்.11-ல் கன்னியாகுமரி, பிப்.12-ல் திருப்பூர், பிப்.13-ல் திண்டுக்கல், பிப்.14-ல் மதுரை, பிப்.15-ல் தஞ்சை, பிப்.16-ல் திருநெல்வேலி மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வழி பிரசாரம் செய்கிறார்.