தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இறுதிநாள் என்பதால், ஏராளமானோர் திரண்டு வந்து வேட்பு மனு அளித்தனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.
தமிழகத்தில் மொத்தமாக 690 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.
வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் அனைத்து பகுதிகளிலும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, டோக்கன் வழங்கி வேட்பு மனுக்களை பெறுவதற்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்பு மனுவை திரும்பப் பெற 7ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு, சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இதுவரை வேட்புமனு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கையானது வெளியாகியுள்ளது. மொத்தமுள்ள 12,838 மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 37ஆயிரத்து 518 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.