நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி 12,13 ஆகிய தேதிகளில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் மூன்றாண்டுகளாக நடத்தப்படாமல் உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, 2019ஆம் ஆண்டில் நடைபெற்றது. நீண்ட சட்டப்போராட்டத்துக்கு பின்னர், ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து ஏணைய மாவட்டங்களில் ஊராட்சி பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது.
இதையடுத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஒன்பது மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு எப்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்ற கேள்வி பரவலாக எழுந்த நிலையில், மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, விடுபட்ட 9 மாவட்ட ஊராட்சிகளுக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பே தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, அதன்படி, பிப்ரவரி 12,13 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டு வருவதாகவும் இதற்கான அறிவிப்பு ஜனவரி மூன்றாவது வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.