ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத் தொடர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் 76ஆவது பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், நமது பாதுகாப்பு, வளர்ச்சி, சுதந்திரம் ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்தவை. இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் நாம் இணைந்து செயல்பட வேண்டும். நாம் இன்று பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறோம் என்று பேசினார்.
எந்த நாட்டுடனும் பனிப்போரை விரும்பவில்லை என்ற ஜோ பைடன், அமைதிக்காக எந்த நாட்டுடனும் இணைந்து செயல்பட தயார் என்றார். கொரோனா போன்ற பெருந்தொற்றை வெடிகுண்டுகள் ஆயுதங்கள் மூலம் தடுக்க முடியாது என்றும் அரசியல் மற்றும் அறிவியல் சார்ந்த கூட்டு முயற்சியே தேவை என்றும் பைடன் வலியுறுத்தினார்.
மேலும், பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ள வளரும் நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் நிதி அதிகரிக்கப்படும் என்றும் பைடன் உறுதி அளித்தார்.