கடந்த 2 மாதமாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. முதலில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடத்தப்பட்ட முகாம், சனிக்கிழமைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
தடுப்பூசி போடும் பணியை மேலும் அதிகப்படுத்தும் வகையில் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரத்திற்கு 2 முறை தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது.
தற்போது பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும் சுகாதாரத்துறை தொடர்ந்து விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் மெகா தடுப்பூசி முகாம்கள் மீண்டும் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் மெகா சிறப்பு முகாம்கள் வருகிற 4-ந் தேதி நடைபெறுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார பணியாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
சனிக்கிழமைகளில் மெகா முகாம்கள் நடத்தப்பட்டால் ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை எடுப்பதற்கு வசதியாக இருக்கும் என்ற அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 16 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். வருகிற சனிக்கிழமை முகாம்களில் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.