ஐ தமிழ் நேயர்களே…வணக்கம்.
தமிழ்நாட்டிலேயே, நவ துர்க்கைகளில் ஒன்றான வனதுர்க்கைக்கு, இங்கு
மட்டும்தான் தனி கோயில் உள்ளது என்பது சிறப்பு.
விநாயகர் இல்லாத கோயிலை நீங்கள் பார்க்கவே முடியாது. ஆனால் இங்கு அம்பாளுடனே விநாயகர் ஐக்கியமாகி இருப்பதாகக் கருதுவதால், விநாயகருக்குத் தனி சந்நதி கிடையாது.
எல்லாவற்றையும் விட, சூரசம்ஹார நிகழ்வில் சிக்கல் சிங்காரவேலவர் சந்நதியில், தாயிடம் வேல் வாங்கும்போது, முருகனின் முகத்தில் வியர்வைத் துளிர்க்கும். அதுபோல, இத்தலத்து அம்பாளுக்கு அர்ச்சனை செய்யும்போது, அவளது உள்ளங்கையில் வியர்க்கும்.
என்ன நேயர்களே..
பிரமிப்பாக இருக்கிறதா…..
இப்படியோர் அதிசய ஆலயத்தை இன்று தரிசிப்போம் . தஞ்சை மாவட்டம், ஆடுதுறை அருகிலுள்ள கதிராமங்கலத்தில், ஸ்ரீ வனதுர்க்கா பரமேஸ்வரி ஆலயம் அமைந்திருக்கிறது. மிகவும் சக்தி வாய்ந்த , பராச்சக்தியின் வடிவமான, கதிராமங்கலம் வனதுர்க்கையின் திருத்தலத்திற்கு உங்களை அழைத்துச் செல்வதில், ஐ தமிழ்த் தாய் மகிழ்ச்சி கொள்கிறது.
பொதுவாக துர்க்கையானவள் சிம்மவாகினியாக அல்லது மகிஷாசுரனை வதைத்ததன் அறிகுறியாக, அவனை தனது பாதத்தில் வைத்தப்படியே காட்சி தருவாள். ஆனால் இத்தலத்தில் மகாலட்சுமி அம்சமாக, சாந்த ரூபத்தில் தாமரை மலரில் ஸ்ரீ துர்க்கா தேவி எழுந்தருளியிருக்கிறாள்.
“மகிஷாசுரன், சண்டமுண்டன், தூம்ரலோசன்,ரக்தபீஜன் ஆகிய அசுரர்கள் தேவலோகத்தில், தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும், ஏராளமான துன்பங்களை தந்து வந்தனர். எனவே அவர்கள் அன்னை பராசக்தியிடம் முறையிட, அசுரர்கள் அனைவரையும் அம்பாள் சம்ஹாரம் செய்த பின், காவிரிக்கரையோரம் பசுமரங்கள் அடர்ந்த இத்தலத்தில் வந்து, ஏகாந்த நிலையில் தவம் செய்தபடி, பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள்.
இதையும் படிங்க : ஸ்ரீ திரிநேத்ர தஜபுஜ வீர ஆஞ்சநேயர் ஆலய வரலாறு!!
வட இந்தியா… வாரணாசியில் உள்ள ஸ்ரீ விசாலாட்சி மற்றும் ஸ்ரீ அன்னபூர்ணாம்பிகை ஆகியோருக்கும், இந்த வனதுர்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இக்கோயில் அமைக்கிறபோதே, “காசி கோபுரத்திற்கு ஏற்ப விமானம் கட்டுவதாக இருந்தால் கட்டுங்கள். அல்லது என் சிரசுக்கு மேல் ஆகாயம் தெரியும்படியாக துவாரம் வைத்துக் கட்டுங்கள்.” என்று அம்பாள் அசரீரீயாக உத்தரவிட்டாளாம். அப்போது கோயில் எழுப்பிய முன்னோர்கள், காசிக்கு இணையாக விமான கோபுரம் கட்ட இயலவில்லை என்பதால், கர்ப்பக்கிரகத்தில் அம்பாள் தலைக்கு மேல் ஒரு சதுரடி அளவில் துவாரம் வைத்து கட்டியுள்ளார்கள். இங்கு காலையில் ஒரு கால பூஜை மட்டும்தான்.இரவில் கிடையாது. காரணம் இரவில் அம்பாள், அந்த துவாரம் வழியே, காசிக்கு சென்று வழிபட்டு வருவதாக ஐதிகம்.
சிவன் – பார்வதி திருமண கோலத்தைக் காண முக்கோடி தேவர்களும், ரிஷிகளும் வடக்கிலுள்ள கயிலாயத்தில் குவிந்ததால், தென்பகுதி உயர்ந்தது. எனவே பூமி சமநிலை பெற வேண்டும் என்பதற்காக ஈசன், அகத்தியரை தெற்கு நோக்கி பயணிக்க உத்தரவிடுகிறார்.” நான் தென்திசை சென்றுவிட்டால், உங்கள் திருமணக் கோலத்தை எப்படி காண்பது ?” என்று வருந்துகிறார் அகத்தியர். உடனே ஈசன் ” நீ பயணிக்கும் தென்திசையிலேயே மணக்கோலத்தில காட்சி தருவதாக” உறுதியளிக்கிறார்.
அதனை ஏற்றுக்கொண்டு அகத்தியர் செல்லுகையில், விந்தியன் என்னும் அசுரன் மலையாய் உயர்ந்து பாதையைத் தடை செய்கிறான். அந்த அசுரனை அழிக்க வேண்டும் என்று அன்னை பராசக்தியிடம் முறையிட, அகத்தியரின் வேண்டுகோளை ஏற்று, அந்த விந்தியவனத்தில் வனதுர்க்கையாய் உருவம் கொண்டு, அசுரனை சம்ஹாரம் செய்கிறாள். அதனால் மகிழ்ந்த அகத்தியர் ,அதன்பின் காவிரி ஆறு வடதிசை நோக்கி ஓடுகின்ற, மரங்கள் அடர்ந்த இந்த வனத்தில் அம்பிகையை பிரதிஷ்டை செய்து, அதற்கு ‘வனதுர்க்கை’என்று பெயரிட்டு வழிபடுகிறார் இங்கே ஈசன் ஏற்கனவே உறுதியளித்தபடி, அகத்தியருக்குத் திருமணக் கோலத்தில் காட்சி கொடுத்து அருளுகிறார். அப்போது அகத்தியர் பிரதிஷ்டை செய்த அம்பாள்தான், தற்போது இங்கு சுயம்புமூர்த்தியாக ஸ்ரீ வனதுர்க்கை பரமேஸ்வரியாக, பக்தர்கள் வேண்டுவன அருளும் கருணைக் கடலாக, விளங்குகிறாள்.
மிருகண்டுரிஷி தனது மகன் மார்க்கண்டேயனுக்கு 16 வயது வரைதான் ஆயுள் என்று பிரம்மா உத்தரவுபடி நடந்து விடுமே என பயந்து, கவலைக் கொண்டு, தனது மகன் உயிரைக் காப்பாற்ற தல யாத்திரை செய்கிறார். அப்படி வரும் வேளையில் சிவமல்லிகா என்னும் இந்த வனத்தில் ஸ்ரீ வனதுர்க்காவை தவமிருந்து, தரிசித்து தனக்குப் புத்திரசோகம் வராமல் தடுக்க வேண்டுகிறார். அம்பாளும் மிருகண்டுரிஷிக்கு “திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர், எமனை சம்ஹாரம் செய்து, உனது மகன் மார்க்கண்டேயனுக்கு ‘என்றும் பதினாறு’ என வரம் அளிப்பார்” என்று அனுக்கிரகம் செய்கிறாள்.அதன்படியே நடைபெற்றது. மார்க்கண்டேயன் உயிர்க்காத்தருளிய தாய் இவள்தான் என்கிறது” தலவரலாறு.
வால்மீகி எழுதிய ராமாயணத்தை தமிழில் வடித்த கவிச்சக்கரவர்த்தி கம்பனை, ஆதரித்த சடையப்ப வள்ளல் வாழ்ந்த ஊரும் இதுதான் .ஒரு சமயம் அருகில் உள்ள தேரழுந்தூரில் கம்பர் தனது ஓட்டை குடிசை வீட்டில் படுத்து உறங்கும்போது, திடீரென பலத்த காற்று வீச, மழை கொட்டியது. அப்போது கம்பர் தனது தாயாக எண்ணி தினசரி வழிபடும் இந்த அம்பாளை வேண்டிக்கொண்டு உறங்கி விட்டாராம். உடனே அம்பாள் அனுக்கிரகத்தால் அவர் வீட்டின் கூரை கதிர்வேய்ந்து சரியானது. மழை வீட்டில் விழவில்லை. இது அம்பாளின் கருணையே என்று மகிழ்ந்த கம்பர், இந்த அம்பாளை ” கதிர் வேய்ந்த மங்கலம் ” என்று பாடி புகழ்ந்துள்ளார்.
‘நெற் கதிர் வேய்ந்த மங்கலம்’ என்பது மருவி ‘கதிராமங்கலம் ஆனது” என்றும் கூறுவர்.
கோவிலில் பாலாஜி குருக்களிடம் பேசினோம்.
“பொதுவாக எல்லா கோயில்களிலும் துர்க்கையானவள், வடக்கு அல்லது மேற்கு நோக்கிதான் காட்சியளிப்பாள். ஆனால் இத்தலத்தில் மட்டும்தான் கிழக்கு நோக்கி தனி சந்நதி கொண்டு அருள் பாலிக்கிறாள்.
வலது கை சாய்ந்த நிலையில் அபய, அஸ்தம் என இரண்டு முத்திரைகளை காட்டி வேறு எந்த அம்மனிடத்தில் காண முடியாத, இடையில் கை வைத்து எழிலான, நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள் . ராகுவுக்கு அதிதேவதை துர்க்கை எனவே ஞாயிறு,செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் திருமணம் வேண்டி ராகு காலத்தில் இந்த துர்க்கைக்கு அபிஷேக அர்ச்சனை செய்ய, திருமணம் விரைந்து கைகூடும். இவளை ஆராதனை செய்ய, சகல தெய்வங்களையும் ஆராதித்த பலன் கிடைக்கும் என்பது கண்கூடு. மலைபோல பிரச்னைகள் வாழ்வில் வந்தாலும், இவளை வழிபட பனி போல விலகும். தங்களது குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் இத்தலத்தில் வழிபட குலதெய்வத்தை வழிபட்ட பலன் கிடைக்கும்” என்றார்.
“ஜெய ஜெய தேவி,
ஜெய ஜெய தேவி,
துர்கா தேவி
சரணம் “
அடுத்து ஓர் அற்புதமான ஆலயத்தில் சந்திக்கும்வரை, உங்களிடமிருந்து விடைபெறுவது ஐ தமிழ் !