குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்து மும்பைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி(prime-minister-modi) நேற்று தொடங்கி வைத்தார். அதே ரயிலில் அவர் கலுபூர் ரயில் நிலையத்திற்கு பயணம் செய்தார்.
குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அங்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். சில திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
காந்திநகர் ரயில் நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங்புரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2.0 ரயிலில் அதிநவீன வசதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். ரயிலின் என்ஜின் கட்டுப்பாட்டு அறையையும் பிரதமர் பார்வையிட்டார். அதே ரயிலில் கலுபூர் ரயில் நிலையத்திற்குச் சென்ற மோடி, ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில் பயணிகளின் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார். வந்தே பாரத் ரயில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்களுடன் பிரதமர் மோடி உரையாடி அவர்களைப் பாராட்டினார்.
இந்த நவீன ரயில் 100 கிமீ வேகத்தை 52 வினாடிகளில் எட்டிவிடும். இது அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும். இந்த ரயில் காந்திநகரில் இருந்து மும்பைக்கு 6 முதல் 7 மணி நேரத்திற்குள் பயணிக்கும். இதில் வைபை, 32 இன்ச் டிவி போன்ற வசதிகள் உள்ளன.
அகமதாபாத் மெட்ரோ ரயில்:
கலுபூர் ரயில் நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோடி, ரூ.12,925 கோடி செலவில் ஆமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் பயணித்த பிரதமர் மோடி, தால்தேஜ் என்ற இடத்தில் இறங்கி, தூர்தர்ஷன் மையத்திற்கு சென்றார். நேற்று பிற்பகல் அங்கு நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அவர் உரையாற்றினார். குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அம்பாஜி நகருக்கு நேற்று மாலை சென்ற பிரதமர் மோடி, அங்கு ரூ.7,200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன்பின் அம்பாஜி கோவிலில் வழிபாடு செய்தார்.
ஆம்புலன்சுக்கு வழிவிட்ட பிரதமர்:
அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, காந்திநகர் ராஜ்பவனுக்கு காரில் சென்றார். அவரது வாகனத்திற்கு முன்னும் பின்னும் பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் வந்தன.
அப்போது அவரது வாகனத்தின் பின்னால் ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் கேட்டது. உடனே பிரதமர், தனது வாகனத்தை சாலையோரம் நிறுத்தச் சொன்னார். பிரதமரின் வாகனம் நின்றதும், பாதுகாப்புப் படையினரின் வாகனங்களும் சாலையோரம் நிறுத்தப்பட்டன.
ஆம்புலன்ஸ் சென்றதும், பிரதமர் மோடியின் வாகனம் மற்றும் அவரது பாதுகாப்புக்காக வந்த வாகனங்கள் மீண்டும் புறப்பட்டு சாலையின் மையப் பகுதியில் பயணித்தன. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளை குஜராத் மாநில பாஜக ஊடக பிரிவு வெளியிட்டுள்ளது.