வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் பழனிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடுக்கலுார் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. பீரங்கி இயக்குவதில் வல்லவரான இவர் எதிரி எல்லைகளை குறிபார்த்து சுடுவதில் திறமை மிக்கவர்.
ராணுவத்தில் 22 ஆண்டுகளாக பணியாற்றிய இவர் கடந்த ஆண்டு ஜூன் 16ல் இந்திய -சீன எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களின் அத்துமீறலை தடுக்க வீரத்துடன் போரிட்டதில் வீர மரணம் அடைந்தார்.
இந்நிலையில் குடியரசு தின விழாவில் பழனிக்கு மத்திய அரசு வீர் சக்ரா’ விருது அறிவித்திருந்தது. இதனையடுத்து டில்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பழனியின் மனைவி வானதிதேவியிடம் வீர் சக்ரா’ விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
இந்நிலையில் வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் பழனிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் வரலாற்றில் நிறைந்து வாழும் ராணுவ வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது அளித்திருப்பது பெருமைக்குரியது என்றும், கல்வான் பள்ளத்தாக்கில் அவர் காட்டிய தீரம் தமிழர்களது நாட்டுப்பற்றின் அடையாளம் என்றும் பதிவிட்டுள்ளார்.