தனியார் கிரிப்டோ கரன்சியை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 29 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் மொத்தம் 26 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில், கிரிப்டோ கரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணய கட்டுப்பாடு மசோதா 2021 என்ற மசோதாவும் ஒன்று.
இந்த மசோதாவில் இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் கிரிப்டோ கரன்சிகளை தடை செய்யவும் இந்திய ரிசர்வ் வங்கி மூலம் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்தை உருவாக்க கட்டமைப்பை ஏற்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு பிட் காயின் வருகைக்கு பின்னர் கிரிப்டோகரன்சிகளின் வளர்ச்சி அதிகரித்தது. அப்போது நூறு ரூபாய்க்கும் குறைவாக இருந்த ஒரு பிட் காயின் மதிப்பு தற்போது 50 லட்சத்துக்கும் மேல் உள்ளது. கிரிப்டோ கரன்சியை வாங்குவதில் மக்களுக்கு இருக்கும் ஆர்வம் ஒருபக்கம் உள்ளபோதும், இத்தகைய கரன்சிகள் மூலம் டார்க் வெப்பில் போதைப்பொருள் விற்பனை, ஆயுத விற்பனை போன்றவையும் அதிகரித்து வருகிறது.
இதனிடையே கிரிப்டோ கரன்சி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அண்மையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்தே கிரிப்டோகரன்சி தொடர்பான மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முனைப்பு காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.