தனது இறுதிமூச்சு அடங்கும்வரை திராவிடர் இயக்க உணர்வுடன் வாழ்ந்து காட்டிய வீரர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி என வீரமணி உருக்கம் தெரிவித்துள்ளார்.
ஏ.வி.பி.ஆசைத்தம்பிக்கு நூற்றாண்டு விழா :
அவரது 100 ஆம் ஆண்டு பிறந்த நாள் 24.9.2023 என்று அறிய, அவரது நூறாவது ஆண்டும் நமது திராவிடர் இயக்கத்தவரால் பெரிதும் கொண்டாடப்பட வேண்டிய கொள்கை – லட்சியத் திருநாள்களில் ஒன்றாகும்.
காரணம், திராவிடர் கழகத்தில் இருந்தபோது அவர் ஒரு சிறந்த பேச்சாளர்.
தந்தை பெரியார் பேச்சு பாணியையே பின்பற்றியதுபோல, கேட்டார் பிணிக்கும் பேச்சாக அவரது மேடைப் பேச்சு அமையும்.
அதுமட்டுமா?தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, நாவலர் இரா.நெடுஞ்செழியன், இனமானப் பேராசிரியர் க.அன்பழகன், நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் போன்ற பலராலும் போற்றப்பட்ட தனித்த ஆற்றலாளர். தலைசிறந்த கொள்கையாளர்.
ஆசைத்தம்பியின் குடும்பமே திராவிடர் இயக்கத்தவர்:
விருதுநகரில் அவரது தந்தையார் திரு.ஏ.வி.பழனியப்பன் அவர்கள் கடைசிவரை திராவிடர் கழகத்திலே இருந்தவர்.சென்னைக்கு வந்த ஏ.வி.பி. அவர்களது மேடைப் பேச்சு பரவி, ரசிகர்கள் அவரை ‘வாலிபப் பெரியார்’ என்றே அழைப்பர்.மனதிற்பட்டது எதையும் வெளிப்படையாகப் பேசத் தயங்காத வெள்ளை உள்ளம் படைத்த கருஞ்சட்டை மனப்பான்மையாளர்.
அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியவர்களுக்கு அடுத்தபடி, பேச்சு, எழுத்து, நாளேட்டின் ஆசிரியர் – ‘தனியரசு’ ஏடு நாளேடாகவும்கூட பல ஆண்டுகள் நடந்து வந்தது! திரைப்பட கதை வசன கர்த்தா என்ற பல பரிமாண ஆற்றலாளர்அவரது சகோதரி, சகோதரியின் கணவர் ஆகியோர் உள்பட அவரது குடும்பமே திராவிடர் இயக்கத்தவர் என்று பெருமிதம் தெரிவித்தார்.
‘மிசா’ கைதி – சிறையில் தாக்கப்பட்டவர்:
1948 இல் ‘காந்தியார் சாந்தியடைய’ என்ற ஒரு கட்டுரையை ‘தனியரசு’ வார ஏட்டில் எழுதியதற்காக – கோட்சே என்ற மராத்திப் பார்ப்பனர் காந்தியை சுட்டுக் கொன்றார் என்பதனால், எழுதப்பட்ட அக்கட்டுரை ‘அன்றைய காங்கிரஸ் ஆட்சியில் வழக்குப் பாய்ந்து சிறை பிடிக்கப்பட்டு, சிறையில் மொட்டையடிக்கப்பட்டவர்.
பின்னர் திராவிடர் இயக்கத்தின் பல போராட்டங்களிலும் தவறாது கலந்துகொண்டவர்.நெருக்கடி காலத்தில் ‘மிசா’ கைதியாக சென்னை சிறைச்சாலைக்குள் தாக்கப்பட்டவர்களில் அவரும் ஒருவர்! எங்களோடு சிறைவாசம் செய்வதில், சிறிதுகூட சலனப்படாமல் அன்றாடம் மகிழ்ச்சியுடன் கலகலப்பாக இருந்தவர்.
எம்.பி.,யாகவும், எம்.எல்.ஏ.,வாகவும் இருந்து பணியாற்றியவர்:
கலைஞர் அவர்கள் அவரை வடசென்னை தொகுதியில் நிற்க வைத்து நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெறும் வாய்ப்பைத் தந்தார்.
அதற்குமுன்னர் சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராகவும், அதற்குப் பின் எழும்பூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்தார்.
கழக நிகழ்ச்சிக்கு அந்தமான் சென்றபோது, அங்கே மாரடைப்பால் காலமானார் என்பது வேதனைக்குரிய செய்தி.
அவரது எழுத்துலக படைப்பாற்றல், பேச்சாற்றல் எல்லாவற்றையும்விட, கொள்கைப் பிடிப்பு, தியாகம் என்ற தன்னலமறுப்பு எல்லாம் இன்றைய இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டும் நெறிமுறைகளாகும்.
திராவிடர் கழகத்தின் சார்பில் நூற்றாண்டு விழா:
நமது முதலமைச்சர் தி.மு.க.வில் இளைஞரணியைத் தொடங்கியபொழுது, அதை நன்கு ஊக்குவித்த பெரு உள்ளக்காரர் ஏ.வி.பி. ஆசைத்தம்பி அவர்கள். திராவிடர் கழக மேடைகள் பெரிதும் அவருக்கே சொந்தமாயின அந்நாளில்.அவரது 100 ஆம் ஆண்டு பிறந்த நாளை வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி – சென்னை பெரியார் திடலில், திராவிடர் கழகம் நடத்தி மகிழும் என்று கீ. வீரமணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.