வேலூரில் நள்ளிரவில் ஆட்டோவில் பயணித்த இளம் பெண் மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக சிறார்கள் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி திருவலம் சாலையில் உள்ள திரை அரங்கில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலூர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் இரவு படம் பார்த்துவிட்டு 12.30 மணிக்கு தியேட்டர் முன்பு ஆட்டோவுக்காக காத்து நின்றனர்.
இவர்களை நோட்டமிட்ட மர்மநபர்கள் 5 பேர் ஒரு ஆட்டோவில் அந்த இடத்துக்கு வந்து இது சேர் ஆட்டோ தான் நீங்கள் ஏறுங்கள் என கூறியுள்ளனர். ஓட்டுனர் கூறியதும் ஆட்டோவில் ஏறிய இருவரும் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளனர். காட்பாடியில் இருந்து வேகமாக வந்த ஆட்டோ கிரீன் சர்க்கிள் வந்ததும் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலை நோக்கி திரும்பியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பரும் இங்கே ஏன் செல்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அங்கே சாலையை மறைத்து வேலை ஏதோ நடக்கிறது அதனால் சுற்றி போகிறோம் என கூறினர்.
சிறிது தூரம் சென்றதும் அந்த கும்பல் கத்தி முனையில் மிரட்டி. பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து செல்போன்கள் மற்றும் ஏ.டி.எம். கார்டை பறித்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்து பெண் மருத்துவர் மற்றும் அவரது நண்பர் சம்பவம் குறித்து வெளியே கூறவில்லை. இந்த நிலையில் சத்துவாச்சாரியில் நேற்று ரவுடி கும்பல் ஒன்று தகராறில் ஈடுபட்டனர். அதில் சிலர் டிப்டாப் உடை அணிந்திருந்தனர். அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்ற சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரனையில் அவர்கள் மருத்துவமனை ஊழியர்கள் 2 பேரை ஆட்டோவில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததும், தொடர்ந்து அவர்களின் செல்போன் மற்றும் ரூ 40 ஆயிரம் பணத்தை பறித்து அந்த பணத்தில் உல்லாசமாக செலவு செய்ததும் தெரியவந்தது.
இதனை அடுத்து இந்த துணிகர செயலில் ஈடுபட்ட கும்பலில் 3 பேரை பிடித்து விசாரித்து வரும் போலீசார் பிடிப்பட்டவர்களிடம் இருந்து 30 ஆயிரம் ரூபாய் பணமும் ஏடிஎம் கார்டும் பறிமுதல் செய்து மேலும் 2 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் மேலும் 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிடிபட்டவர்களில் மூவர் 18 வயதிற்குட்பட்ட மைனர் சிறுவர்கள் என தெரியவந்துள்ளது.