மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள காமராசர் பல்கலைக்கழக கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.
விழாவில் பேசிய அமைச்சர் பி.டி.ஆர்.,”மாணவர்களின் திறன் மேம்பாட்டில் உள்ள இடைவெளியை நான் முதல்வன் திட்டம் மூலம் நிரப்பியுள்ளோம். உயர்கல்வியின் நோக்கமே சிறந்த, திறன் மிக்க மனிதர்களை உருவாக்குவதே.
தமிழ்நாட்டில் இன்று பலர் முதல் தலைமுறை பட்டதாரிகளாக உள்ளனர். 1993ல் 4000 பேர் பொறியியல் படித்தனர். ஆனால் இன்று 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பொறியியல் படிக்கின்றனர்.இன்று கல்வி ஜனநாயகப் படுத்தப்பட்டுள்ளது.
உலகத்தில் யாருமே எல்லாவற்றிலும் வெற்றி பெற்றவர்கள் கிடையாது. தோல்வியே காணாதவர்களும் கிடையாது. வெற்றியும், தோல்வியும் தற்காலிகமானதே. உங்கள் வாழ்க்கையில் சில நேரத்தில் இக்கட்டான சூழ்நிலைகளை சந்திப்பீர்கள்.
வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றுவதற்கு இரண்டு தான் தேவை. ஒன்று விடாமுயற்சி. இன்னொன்று, தோல்வியை சந்திக்கும் போது அதை தாண்டி செல்வதற்கு துணிச்சலும், உறுதியான மனமும் வேண்டும். இந்த இரண்டும் ஒருவரிடம் இருக்கிறதா, இல்லையா என்பதே வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்களுக்கும், வெற்றி பெறாதவர்களுக்கும் உள்ள வேறுபாடு.
மாநிலத்துக்கு பயனுள்ள வகையில் பொருளாதாரம், உற்பத்தியை மேம்படுத்துவதற்கு ஏற்ற நல்ல தொழில், வேலையை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.