தமிழ் சினிமாவில் சமூக நீதி அரசியல் பேசும் துடிப்பான இயக்குநராக வலம் வரும் இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் , வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் தான் மாமன்னன்.
கடந்த மாதம் 29 ஆம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் கோலாகலமாக வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று தாறுமாறாக ஓடிக்கொண்டிருக்கிறது . வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றுள்ள இந்த படத்திற்கு பலரும் பாராட்டுகளையும் ,வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் .
அந்தவகையில் தற்போது இயக்குநரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் காதல் கணவருமான விக்னேஷ் சிவன் மாமன்னன் படம் குறித்து அவரது கருத்தை தெரிவித்துள்ளார் .இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் கூறியதாவது :
மாரி செல்வராஜின் கலை பயணத்தில் மற்றொரு அற்புதமான படைப்பு மாமன்னன் . வடிவேலு எனும் மகா கலைஞனின் இத்தனை ஆண்டுகால திரை பயணத்துக்கான பரிசாக மாமன்னனுக்காக அவருக்கு தேசிய விருது கொடுப்பதே சிறந்த கெளரவமாக அமையும்.
முக பாவனையில் மீட்டர் கொஞ்சம் ஏறி இறங்கியிருந்தாலும் அவருடைய காமெடி காட்சிகளை நினைவூட்டிவிடும் அபாயம் இருந்தாலும் தனது அபார நடிப்பால் திரையில் முற்றிலுமாக புது பரிமாணத்தை எட்டியிருக்கும் வடிவேலு சார் இந்த நூற்றாண்டு கண்ட ஆகச் சிறந்த கலைஞர்களில் ஒருவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை!
உதய் சார் கேரியரில் இதுவே உச்சம். நிஜ வாழ்வில் ஒரு அரசியல் ஆளுமையாக இருந்தபோதிலும் ஒரு இயக்குனர் தனக்கான அரசியலை பேச முழு சுதந்திரம் கொடுத்ததோடு இந்த மாபெரும் படைப்பு உருவாக பக்க பலமாக துணை நின்றதில் அவரது நேர்மை வெளிப்படுகிறது என தெரிவித்துள்ளார்.