கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட மக்களுக்கு, நடிகர் விஜய் முதல் கட்டமாக நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இயல்பைவிட அதிக அளவு மழை பெய்ததது.
வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தமிழகத்தின் தென் மாவட்டங்களின் பல பகுதிகள் நீரில் மூழ்கின. வீடுகள் கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இதனை அடுத்து அரசு அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், தன்னார்வலர்கள் எனப் பலரும் களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.
இந்நிலையில் வெள்ளத்தில் பாதித்த பகுதி மக்களுக்கு, நெல்லை மாநகரில் நடிகர் விஜய் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.
இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானத்தில் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள கே.டி.சி.நகர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார்.

தூத்துக்குடி வெள்ளப்பெருக்கின்போது பாத்திமா நகரை சேர்ந்த ராபின்சிங் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரை போனில் தொடர்பு கொண்டு ஏற்கனவே விஜய் ஆறுதல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ராபின்சிங் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதியை விஜய் வழங்கினார். இதேபோல் வீடுகளை இழந்த வள்ளி என்பவருக்கு ரூ.50 ஆயிரம், இசக்கி என்பவருக்கு ரூ.50 ஆயிரம், சங்கரன் என்பவருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் வீடுகள் சேதம் அடைந்த 30 பேருக்கு தலா ரூ.25 ஆயிரத்தை வழங்கினார்.

மேலும் 5 கிலோ அரிசி, சர்க்கரை, ரவை, கோதுமை, சேமியா, உப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் வேட்டி, சட்டை, துண்டு ஆகியவற்றை 1,500 பேருக்கு விஜய் வழங்கினார். தொடர்ந்து 2,500 பேருக்கு வடை, பாயாசத்துடன் அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில், விஜய் மக்கள் இயக்க தென் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.