பொங்கலை முன்னிட்டு அஜித் குமாரின் நடிப்பில் துணிவு படமும் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளது. இதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வரும் நிலையில் தொடர்ந்து வெளிவரும் இரண்டு படங்களின் பாடல் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஒரே நாளில் பெற்று வருகிறது.
மேலும் இந்த படங்கள் வெளியாக உள்ளதன் எதிரொலியாக வருகின்ற ஜனவரி 6 ஆம் தேதி அஜித்தும் விஜயும் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படம் ரீ ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆர்யா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் சந்தானம் தல தளபதி சலூன் என்ற பெயரில் சலூன் கடை வைத்திருப்பது போன்று திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள திரையரங்கில் வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களும் தங்கள் திரையரங்கில் ரிலீஸ் ஆக உள்ளது என்பதை ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் அந்த திரையரங்க நிர்வாகம் தல தளபதி பொங்கல் என்கிற வாசகத்துடன் இரண்டு படங்களின் போஸ்டர்களையும் அச்சிட்டு திரையரங்க வாசலில் பேனர் வைத்திருக்கிறது.
பொதுவாக அஜித் மற்றும் விஜய் இருவரின் படங்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரே நேரத்தில் வெளியிடப்படுவதால் ரசிகர்கள் இதனை போட்டியாக கருதி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நேரத்தில் இருவர் படங்களின் போஸ்டரையும் அச்சிட்டு தல தளபதி பொங்கல் என்று இந்த திரையரங்க நிர்வாகம் பேனர் வைத்துள்ளது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது