பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம்
செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளதாக விளையாட்டுகளுக்கான நடுவர் மன்றம் தெரிவித்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதி போட்டியில் கலந்துகொள்ள இருந்த நிலையில் எடை அதிகரிப்பு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார் . இந்த செய்தி ஒட்டுமொத்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மேல் முறையீடு செய்தார்.
நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என வினேஷ் போகத் கோரியிருந்தார்.
இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தொடர்ந்த வழக்கில் ஆக.13ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக விளையாட்டுகளுக்கான நடுவர் மன்றம் தெரிவித்துள்ளது.
50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்பாக 100 கிராம் கூடுதல் எடை உள்ளதாகக் கூறி வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் பெரும் மனஉளைச்சலில் இருந்து வந்த வினேஷ் போகத் இனி மல்யுத்த போட்டிகளில் விளையாடப்போவதில்லை என கூறி ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.