T20 உலகக்கோப்பை போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது குறித்து வீரேந்தர் சேவாக் கோபமாக சாடியுள்ளார்.
இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை (T20 World Cup) லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். இதில், ஆட்டத்தின் 3-வது ஓவரில் இஷான் கிஷன் 4 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து 6-வது ஓவரில் கே.எல்.ராகுலும் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் 35 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது.
இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி மற்றும் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா கூட்டணி, இந்திய அணியை சரிவில் இருந்து மீட்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோஹித் ஷர்மா 14 ரன்களிலும், விராட் கோலி 9 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து வந்த ரிஷப் பந்த் 12 ரன்களில் வெளியேற, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும், 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் ஜடேஜா மட்டுமே 19 பந்துகளில் 26 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை இந்திய அணி எடுத்தது.
இதனை அடுத்து பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 14.3 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 49 ரன்களும், கேப்டன் கேன் வில்லியம்சன் 33 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியைப் பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மட்டுமே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியில் தோல்வியடைந்ததால், அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக், இந்திய வீரர்களை கடுமையாக சாடியுள்ளார். அதில், ‘இந்திய அணியிடம் இருந்து ஏமாற்றமான ஆட்டத்தையே பார்த்தேன். நியூஸிலாந்து அணி சிறப்பாக விளையாடியது.
இப்போட்டியில் இந்திய அணியின் உடல்மொழி மிகவும் மோசமாக இருந்தது. அதேபோல் ஷாட் தேர்வுகளும் திருப்திகரமாக இல்லை. நாம் அரையிறுதிக்கு செல்லமாட்டோம் என்பதை நியூஸிலாந்து அணி உறுதி செய்துள்ளது. இந்திய அணி, தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் இது’ என சேவாக் கூறியுள்ளார்.
இதையேதான் கேப்டன் விராட் கோலியும் இந்திய அணியின் குறையாக கூறினார். நேற்றைய போட்டியில் குறைவான இலக்கை நிர்ணயித்ததும், வீரர்கள் அனைவரும் உத்வேகமும், துணிச்சலும் இல்லாமல் விளையாடியதாக கோலி குறிப்பிட்டார். மேலும் ஒவ்வொரு ஷாட் தேர்வின் போதும் தைரியமாக செயல்படாமல் குழப்பத்துடனேயே இருந்ததாக விராட் கோலி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.