கனடா நாட்டில் இருந்து இந்தியா வர இன்று முதல் மீண்டும் விசா சேவையை இந்தியா தொடங்குகிறது . கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் நிறுத்தப்பட்ட இந்த விசா சேவையை இந்தியா மீண்டும் தொடங்குகிறது.
கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்ட சம்பவத்தில், இந்திய ஏஜென்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார் .
கனடா பிரதமரின் இந்த குற்றச்சாட்டால் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவில் சிறிய விரிசல் ஏற்பட்டதை அடுத்து, கனடாவில் பணியாற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் உள்ள கனடா நாட்டின் தூதரக அதிகாரிகள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசு அறிவித்தது.
இருநாடுகளுக்கிடையேயான இந்த பிரச்னை சற்று பெரிதான நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கனடா நாட்டினருக்கான விசா சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டு கனடா மேற்கொண்ட சில பாதுகாப்பு நடவடிக்கையை தொடர்ந்து, விசா சேவையை இந்திய தூதரகம் இன்று முதல் மீண்டும் தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் நிறுத்தப்பட்ட இந்த விசா சேவையை இன்று முதல் இந்திய அரசு மீண்டும் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
கனடா நாட்டில் உள்ள டொரண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள துணை தூதரகங்களில் இந்த விசா சேவைகள் தொடங்கப்படும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.