நடிகர் விவேக் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் காரணமில்லை என்று மத்திய ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.
தனது நகைச்சுவை நடிப்பால் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள சின்னக்கலைவாணர் விவேக் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாது மரம் நடுவது உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விவேக் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 17ஆம் தேதி அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
தடுப்பூசி செலுத்திய மறுநாளே திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததால் கொரோனா தடுப்பூசி செலுத்திய காரணத்தால்தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என பலரும் கூறினர்.
இதனிடையே நடிகர் விவேக்கின் மரணம் குறித்து தடுப்பூசியால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி ஆய்வு செய்த மத்திய குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் நடிகர் விவேக் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் காரணமில்லை. ஏப்ரல் 15ஆம் கொரோனா தடுப்பூசிபோட்டுக்கொண்ட நடிகர் விவேக் மாரடைப்பால் ஏப்ரல் 17-ல் உயிரிழந்தார். உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே விவேக் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.