அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களையும் ‘நிராகரித்து ஒற்றைத் தலைமை வேண்டும்’ என பொதுக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தி, ஓபிஎஸ் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் மீது தண்ணீர் பாட்டில் வீசி வெளியேற சொன்னதால் சட்டத்திற்கு புறம்பான கூட்டம் என கூறிவிட்டு வெளியேறிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.
அதிமுக பொதுக்குழு இன்று திருவள்ளூர் மாவட்டம் வானகரத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருந்த 23 தீர்மானங்கள் பொதுக்குழு உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டு ஒற்றைத் தலைமை என்ற ஒரே தீர்மானம் வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்று கே.பி.முனுசாமி மற்றும் சி.வி.சண்முகம் அறிவித்ததால் பொதுக்குழு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் ஓபிஎஸ்-க்கு எதிராகவும், ஈபிஎஸ்-க்கு ஆதரவாகவும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
முன்னதாக இந்த பொதுக்குழுவிற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொதுக்குழு,செயற்குழு உறுப்பினர்கள் வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் சூழ எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவிற்கு வருகை தந்தார். அவருக்கு ஆதரவாக ஈபிஎஸ் வாழ்க.. எடப்பாடியார் வாழ்க.. என அவரது ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பின. இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் பிரச்சார வாகனத்தில் தனது தொண்டர்கள் சூழ வருகை தந்தார். அவருக்கு பெரிதாக தொண்டர்கள் கூட்டம் கூடவில்லை.
இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், ஓபிஎஸ் அவருக்காக ஒதுக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் பொதுக்குழு கூட்டம் ஆரம்பம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருந்த தீர்மானங்களை நிராகரித்து ஒற்றைத் தலைமை வேண்டும் என 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தி கையெழுத்திட்ட கடிதத்தை சி.வி.சண்முகம் வாசித்து காட்டினார். இதனையடுத்து இந்த கடிதத்தை அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மகன் உசேனிடம் கொடுத்து கோரிக்கை வைத்தார்.
பிறகு பேசிய அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அடுத்த பொதுக்குழுவில் இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும் என தெரிவித்து, ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் எனவும் தேதியை அறிவித்தார்.
இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி பேசும்போது, இன்னொரு பக்கம் இடையில் மைக்கை பிடுங்கி வைத்தியலிங்கம், இது சட்டத்திற்கு புறம்பான கூட்டம், அடுத்த பொதுக்குழு செல்லாது”.. இந்த கூட்டத்தை புறக்கணித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று பேசி நடையை கட்டினார் வைத்தியலிங்கம். அவருடன் ஓ.பன்னீர் செல்வமும் நடையை கட்ட, ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அவர்கள் மீது தண்ணீர் பாட்டிலை வீசினர். மேலும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள், ஓ.பி.எஸ் வந்த பிரச்சார வாகனத்தின் டயரை பஞ்சர் ஆக்கியதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அடுத்தடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்தியது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.