பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து: கிடைத்தது கருப்பு பெட்டி.. – கருப்பு பெட்டி என்றால் என்ன?

குன்னூரில் ஹெலிகாப்டரில் பிபின் ராவத் உட்பட 13 பேர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தது எப்படி என கேள்வி எழுந்துள்ள நிலையில், அந்த ஹெலிகாப்டரில் இருந்த கருப்பு பெட்டி கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சூழலில், கருப்பு பெட்டி என்றால் என்ன? இந்த கருப்பு பெட்டி எதற்காக பயன்படுகிறது? என பலர் கேள்வியெழுப்புகின்றனர்.. இந்த கருப்பு பெட்டி குறித்து சுருக்கமாக பார்க்கலாம்..

ஒரு விமானமோ அல்லது ஹெலிகாப்டரோ விபத்திற்குள்ளாகும் போது, விபத்திற்கான காரணங்களைத் தெளிவாகவும், முழுமையாகவும் அறிந்துகொள்ள பெரிதும் பயன்படுவது கறுப்புப் பெட்டி  ஆகும். ஒரு விமான விபத்து எப்படி நடந்தது என்பதை, அதிலிருந்து உயிர் பிழைத்தவர்கள் கூறுவதைவிட, கறுப்புப் பெட்டி தெளிவாக வரையறுத்துக் கூறிவிடும் எனலாம்.

கறுப்புப் பெட்டி என்பது விமான விபத்துக்கள் மற்றும் விமானத்தில் நடைபெற்ற அசாதாரண சம்பவங்கள் குறித்த உண்மைகளைக் கண்டறிய வசதியாக, ஒரு விமானத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு பதிவு சாதனங்களின் தொகுப்பு ஆகும்.

டேவிட் வாரன் என்னும் ஆஸ்திரேலிய அறிவியல் அறிஞர் 1953 இல் உலகின் முதல் கறுப்புப் பெட்டி விமான ரெக்கார்டரைக் கண்டுபிடித்தார். வாரனின் தந்தை ஹூபர்ட் வாரன் 1934 ஆம் ஆண்டில் பாஸ் ஸ்ட்ரெய்ட் விமான விபத்தில் உயிரிழந்தார். அந்த விமான விபத்திற்கான காரணத்தை இறுதிவரை யாராலும் கண்டறிய இயலவில்லை. இந்நிகழ்வே வாரன் கறுப்புப் பெட்டியைக் கண்டறியத் தூண்டுகோலாக அமைந்தது.

டேவிட் வாரன் ஏ.ஆர்.எல் விமான நினைவக அலகு (ARL Flight Memory Unit) என்ற பெயரில் தயாரித்த கருவியே முதல் விமான கறுப்புப் பெட்டி ரெக்கார்டர் ஆகும்.

கறுப்புப் பெட்டியில் இரண்டு விதமான கருவிகள் இருக்கும். DFDR என்னும் டிஜிட்டல் விமான தரவு ரெக்கார்டர், CVR  என்னும் காக்பிட் குரல் ரெக்கார்டர் என இரண்டு விதமான கருவிகள் உள்ளன.

DFDR என்பது விமானத்தின் உயரம், செங்குத்து முடுக்கம், எரிபொருள் ஓட்டம் மற்றும் வானியல் உள்ளிட்ட விமானம் குறித்த அனைத்து தரவுகளையும் பதிவு செய்யும் திறன் கொண்டது.

CVR என்பது காக்பிட்டில் நடக்கும் விமானிகளின் உரையாடல்கள் மற்றும் காக்பிட்டில் ஏற்படக்கூடிய அனைத்து வித ஒலிகளையும் முழுமையாகப் பதிவு செய்யும்.

இந்த இரு கருவிகளும் ஒரே அலகாக இணைந்திருக்கும். கறுப்புப் பெட்டியின் ஆரம்ப நாள்களில் தகவல்கள் ஒரு உலோக துண்டுக்குள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் அவை காந்த இயக்கிகளைக் கொண்ட திடநிலை நினைவக சிப்களாக தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன.

முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து குறித்து, அந்த ஹெலிகாப்டரில் இருந்த கருப்பு பெட்டி தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கருப்பு பெட்டியின் மூலம் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Total
0
Shares
Related Posts