வீட்டிற்கு அருகில் மது அருந்தியதை தட்டிக் கேட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதற்கு காரணமான மது அரக்கனுக்கு முடிவு கட்டப்படுவது எப்போது என்று ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கள்ளக்கிணறு என்ற கிராமத்தில், செந்தில்குமார் என்பவரின் வீட்டிற்கு அருகில் அவருக்கு சொந்தமான நிலத்தில் மது அருந்தியதை தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த கும்பல் செந்தில்குமாரையும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவரையும் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்:
மது மிகவும் கொடூரமானது; சமூகச் சீரழிவுகளுக்கும், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவுக்கும் மது தான் காரணம் என்பதற்கு இதைவிட கொடிய எடுத்துக்காட்டு எதுவும் தேவையில்லை. தங்களின் வீட்டுக்கு அருகில் மது குடிக்கக் கூடாது என்று கூறியதற்காக நான்கு அப்பாவிகளை துடிக்கத் துடிக்க வெட்டி படுகொலை செய்யும் துணிச்சல் குடிகார கும்பலுக்கு வந்திருக்கிறது என்றால், மது மனிதனை மிருகமாக்குகிறது என்று தானே பொருள்? எல்லா குற்றங்களுக்கும் தாய் மது தான் என்பதை நன்றாக அறிந்த பிறகும் இன்னும் எவ்வளவு காலத்திற்கு மது அரக்கனின் அட்டகாசத்தை அனுமதிக்கப் போகிறோம்?
மது சமூகத்தை சீரழிக்கிறது என்பதற்கு இந்தப் படுகொலைகள் மட்டுமே சான்று அல்ல. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரின் பிறந்தநாளையொட்டி, கடந்த ஒன்றாம் தேதி அவரது சக மாணவிகள் 7 பேர் வகுப்பறையிலேயே மது அருந்தி, நடனமாடியுள்ளனர். இதையறிந்த பள்ளி நிர்வாகம் அவர்களை இடை நீக்கம் செய்திருக்கிறது.
மது சமூகத்தை சீரழிக்கிறது என்பதை அறிந்த பிறகும் அரசே மது வணிகத்தை தொடர்ந்து நடத்தும் கொடுமையை என்னவென்று சொல்வது? தமிழ்நாட்டில் மதுவை ஒழித்து மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று 42 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. மது சமூகத்தை சீரழிக்கிறது என்ற குற்றச்சாட்டை ஒருபுறம் ஒப்புக்கொள்ளும் தமிழக அரசு, இன்னொருபுறம் அதன் மூலம் கிடைக்கும் ரூ.50,000 கோடி வருமானத்திற்காக தொடர்ந்து மது வணிகத்தை நடத்துவது நியாயமல்ல. மது விலக்கே மக்களைக் காக்கும் என்பதை உணர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.