இந்திய மக்களும், இந்தியாவை கவனிக்கும் உலக நாடுகளும் மிகவும் கூர்ந்து கவனித்துக்கொண்டு இருப்பது சந்திரயான் 3 ன் நிலவுப்பயணம். நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம், எல்.வி.எம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அப்போது முதலே அதன் ஒவ்வொரு கட்ட நகர்வும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
நிலவின் சுற்று வட்டப்பாதையில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் முக்கியமான பணி கடந்த 17ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டு தற்போது விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணிகள் கிட்டத்தட்ட கடைசி கட்டத்தில் உள்ள நிலையில் விக்ரம் லேண்டர், விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்த பிறகு, நிலவின் முதல் படங்களை பகிர்ந்தது. கடந்த 18-ஆம் தேதி விண்கலத்தில் இருந்த பிரிந்த பிறகு லேண்டரின் சுற்று வட்டப்பாதை குறைக்கப்பட்டது.
மீண்டும் இரண்டாவது முறையாக லேண்டரின் சுற்று வட்டப்பாதை ஞாயிறு அதிகாலை 2 மணியளவில் குறைக்கப்பட்டது. இந்நிலையில் தான் சந்திராயன் 3 எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. முன்னதாக வகுக்கப்பட்ட மாற்றத்தின் படி சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் வரும் 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
சந்திரயான் 3 பயணத்தை உலக நாடுகளே மிக கூர்ந்து கவனிக்க மற்றுமொரு காரணம், சந்திரயான் 3 க்கு போட்டியாக ரஷ்யா அனுப்பிய லூனார் 25 விண்கலம் தான். மிகப்பெரும் நாடான ரஷ்யாவின் அரசு விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ், சனிக்கிழமையன்று விண்கலம் தரையிறங்குவதற்கு முந்தைய சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட்ட நிலையில், ஒரு சிக்கல் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே விண்கலம் நிலையத்துடனான தொடர்பை இழந்ததாகக் கூறியது.
“கணிக்க முடியாத சுற்றுப்பாதையில் விண்கலம் நகர்ந்தது மற்றும் சந்திரனின் மேற்பரப்பில் மோதியதன் விளைவாக நிறுத்தப்பட்டது” என்று ரோஸ்கோஸ்மோஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவ்வாறு தோல்வியில் முடிந்த லூனார் 25, 47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யாவின் முதல் நிலவுப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட நிலையில், பல்வேறு தடைகளை கடந்து இந்தியாவின் சந்திராயன் 3 -யில் இருந்து அதன் லேண்டர் தற்போது வெற்றிகரமாக முன்னேறி வருவது இந்தியர்களுக்கு மிகுந்த பெருமை வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.