ரூ.2,000 நோட்டுகளை மாற்ற ஆவணங்களோ, அடையாள அட்டையோ தேவையில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
இதுகுறித்து, கடந்த 19 ஆம் தேதி, ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது.
அந்த அறிவிப்பில், பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23-ம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து தங்களுடைய கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் (அல்லது) வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.
ஒரு நேரத்தில் அதிகபட்சமாக 20,000 ரூபாய் வரை வங்கிகளில் இவ்வாறு வரவு வைத்துக் கொள்ளலாம் அல்லது மாற்றிக் கொள்ளலாம். மேலும், இதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 எனவும் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்த அறிவிப்பை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு, கடுமையாக சாடியுள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கியின் இந்த அறிவிப்பு ரூ.2000 நோட்டுகளை வைத்திருப்போருக்கு சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அந்த பதிவில்,
“2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த அடையாளமும், படிவங்களும், சான்றுகளும் தேவையில்லை என்று வங்கிகள் தெளிவுபடுத்தியுள்ளன.
கறுப்புப் பணத்தை வெளிக்கொணரவே 2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்ற பா.ஜ.க.வின் சுழல் முறியடிக்கப்பட்டது.
சாதாரண மக்களிடம் ரூ.2000 நோட்டுகள் இல்லை. 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே அவர்கள் அதைத் தவிர்த்துவிட்டனர். தினசரி சில்லறை பரிமாற்றத்திற்கு அவை பயனற்றவை.
அப்படியென்றால், ரூ.2000 நோட்டுகளை வைத்துக்கொண்டு பயன்படுத்தியது யார்? உங்களுக்கு பதில் தெரியும்..
2000 ரூபாய் நோட்டு கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் தங்கள் பணத்தை எளிதில் பதுக்கி வைக்க உதவியது.
2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது.
கறுப்புப் பணத்தை வேரறுக்கும் அரசின் குறிக்கோளுக்கு இவ்வளவுதான் காரணம்.
2000 ரூபாய் நோட்டு 2016-ல் ஒரு முட்டாள்தனமான நடவடிக்கை.
குறைந்தது 7 ஆண்டுகளுக்குப் பிறகு முட்டாள்தனமான நடவடிக்கை திரும்பப் பெறப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.”.. என்று அவர் பதிவிட்டுள்ளார்.