தமிழக அரசின் சட்டசபை உரையில் இருந்த சில பகுதிகளை ஆளுநர் (governor) ஆர்.என்.ரவி தவிர்த்தது ஏன்:
தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை எனவும், உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்றும் நேற்று நடந்த சட்டப்பேரவையில் ஆளுநர் முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
இதனையடுத்து, முதலமைச்சர் கண்டனத்தை தொடர்ந்து ஆளுநர் (governor) ரவி, விறுவிறுவென அவையை விட்டு வெளியேறினார். இந்நிலையில், தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்தது ஏன்? என்பது குறித்து ஆளுநர் மாளிகை வட்டாரம் சார்பில் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசு ஜனவரி 6-ம் தேதி அன்று ஆளுநர் உரையை அனுப்பி வைத்தது. இதையடுத்து, அதில் உள்ள ஆட்சேபகரமான விஷயங்களை ஆளுநர் குறிப்பிட்டு கேட்டு அவைகளை நீக்கச் சொல்லி சொன்னபோது உரை அச்சுக்கு சென்றுவிட்டது என்றும் நீங்கள் பேசும்போது அதனை தவிர்த்து பேசுங்கள் என்றும் கூறியுள்ளனர். மேலும், அது ஆவணபூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், ஆளுநர் சட்டப்பேரவையில், அவற்றை நீக்கி வாசித்தபோது உடனடியாக அதனை சேனல்களுக்கு அனுப்பி வைத்தது மட்டுமல்லாமல், ஆளுநர் இருக்கும்போதே ஆளுநர் உரைக்குப்பின் சபை முடித்து வைக்கப்பட வேண்டும் என்கிற சபை மரபை மீறி தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஆளுநர் அவமானப் படுத்தப்பட்டிருக்கிறார்.
ஆளுநர் வாசிக்கத் தவிர்த்த சில பகுதிகள்:
ஆளுநர் வாசிக்கத் தவிர்த்த சில பகுதிகள் அரசாங்கத்தைப் பெரிதும் புகழ்ந்த பகுதிகள் எனவும், ஆனால், உண்மையில் நடைமுறை வேறாக இருந்ததால் அதனை ஆட்சேபித்தார் எனவும், மேலும், ஆளுநர் பேசும்போது அவற்றையெல்லாம் தவிர்க்கலாம் என்று சொன்னதால் தான் அவ்வாறு தவிர்த்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அந்த உரையில், “இந்த அரசாங்கம் வீரம் மற்றும் வீரியம் கொண்ட திராவிட மாடல் ஆட்சியில் தொடரும்” என்றும் இருந்துள்ளது. இதை ஆளுநர் சொல்ல முடியாது.
முதல்-அமைச்சர் அவர் உரையில் பேச வேண்டிய கொள்கை, செய்ய வேண்டியதை ஆளுநர் உரையில் வைப்பார்கள். இதுபோன்ற அதீத புகழ்ச்சிகளை தவிர்ப்பேன்’ என்றும் ஆளுநர் கூறிவிட்டார்.
மேலும், இந்த மாநிலம் அமைதி மற்றும் அமைதியின் சொர்க்கமாக தொடர்கிறது, வன்முறையிலிருந்து விடுபட்டுள்ளது என்று இல்லாத ஒன்றை உரையில் இருந்ததால் அதனை வாசிக்க தவிர்த்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஏதோ மாநில அரசின் முயற்சியால் மட்டுமே விடுவிக்கப்பட்டதாக உள்ள வரிகளும் இருந்துள்ளது. அதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அது சர்வதேச பிரச்சினை மத்திய அரசின் தலையீடு இல்லாமல் எப்படி நடக்க முடியும் என்பதால் ஒன்றிய அரசின் முயற்சி என்கிற வார்த்தையை ஆளுநர் சேர்த்துப் படித்துள்ளார்.
மேலும், உரையின் பல இடங்களில் சட்டம்-ஒழுங்கு மற்றும் அமைதியின் சொர்க்கமாக மாநிலம் திகழ்கிறது என்கிற வார்த்தைகள் முதல்-அமைச்சர் மற்றும் டி.ஜி.பி.யை புகழும் வகையில் இருந்ததால் அந்த வார்த்தைகள் ஆளுநரால் தவிர்க்கப்பட்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது
தொழில் முதலீடு குறித்து உரையில் இருந்த மிகைப்படுத்தப்பட்ட செய்தி:
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கடந்த 1½ ஆண்டுகளில் மட்டும் அதிக அந்நிய நேரடி முதலீட்டை தமிழகம் ஈர்த்தது என்று ஜனவரி 7-ம் தேதி ஆளுநர் உரையில் இருந்ததை கவர்னர் சுட்டிக்காட்டி அதனை மாற்றும்படிகூறியுள்ளார் . ஆனால், அது மாற்றப்படாமல் அப்படியே இருந்ததால் ஆளுநர் அதை தவிர்த்தார்.
ஆனால், உண்மையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மராட்டியம் – 28 பில்லியன் டாலர்கள் மற்றும் கர்நாடகா 25 பில்லியன் டாலர்கள் அந்நிய முதலீட்டை ஈர்த்துள்ளதுள்ள நிலையில், தமிழக அரசு 2.5 பில்லியன் டாலர்கள் மட்டுமே அந்நிய முதலீட்டை ஈர்த்துள்ளதுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.