கேரள மாநிலம் வயநாடு வனப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதிக்குள் வாகனத்தை விட்டு கீழே இறங்கிச் சென்ற சுற்றுலா பயணியை காட்டு யானை ஒன்று துரத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் வயநாடு வனப் பகுதியில் சுற்றுலா பயணிகளை வனத்துறை சார்பில் வாகனங்களில் அழைத்துச் சென்று வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளை காணும்படி செய்கின்றனர்.
இந்நிலையில், இந்த வனப்பகுதியில் யானை, புலி, கரடி என வனவிலங்குகள் பலவும் உள்ளன. சொந்த வாகனங்களில் கேரளாவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் உள்ள சாலை வழியாக செல்கின்றனர்.
அவ்வாறு செல்லும் போது வனப்பகுதிக்குள் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று வனத்துறையினர் அறிவுறுத்தியும், சுற்றுலா பயணி ஒருவர் அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளார்.
அப்போது, அங்கிருந்த யானை கூட்டம் ஒன்றில் இருந்த ஒரு யானை வனப்பகுதிக்குள் வந்த அந்த நபரை துரத்தியது. யானையிடமிருந்து தப்பித்துப் பிழைத்து ஓடிவந்த அந்த நபர் நூல் இழையில் உயிர் தப்பினார்.
அவரை அந்த வழியாக வந்த வயநாடு வனத்துறையினர் பாதுகாப்பாக அவர்களின் வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர். மேலும், வனவிலங்குகள் வனப்பகுதிக்குள் நடமாடும் பொழுது வாகனங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கீழே இறங்கி வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
இதனை மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், வனப்பகுதிக்குள் வனத்துறையினரின் அறிவுறுத்தலையும் மீறி வனப்பகுதிக்குள் இறங்கிய நபரை யானை துரத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.