தஞ்சாவூர் அருகே அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் காரை வழிமறித்த பெண்ணால் பெரும் பரபரப்பு நிலவியது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளாக மக்களைத் தேடி முதல்வர் திட்டத்தின் கீழ் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
தஞ்சாவூர் தொகுதியில் தஞ்சாவூர், வல்லம், நாஞ்சிக்கோட்டையிலும், திருவையாறு தொகுதியில் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், செங்கிப்பட்டி ஆகிய இடங்களில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக் கொண்டார்.
ஒவ்வொரு இடங்களிலும் நூற்றுக்கணக்கனோர் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக வழங்கினர். இந்நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.
இதில் அரசு கொறடா கோவி.செழியன், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மனுக்களை பெற்றார்.
பின்னர் அமைச்சர் வெளியே வந்த போது, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுாக திருநல்லூரை சேர்ந்த இந்திரா என்பவர் அமைச்சரின் காரின் முன்பகுதியில் படுத்தவாறு தலையால் முட்டினார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவரை பிடித்தனர்.
இருப்பினும் அந்த பெண், காரில் தேசிய கொடி இருந்த கம்பியை பிடித்துக்கொண்டு விட மறுத்தார்.இதையடுத்து அமைச்சர் அங்கு வந்த, அந்த பெண்ணிடம் கோரிக்கையை கேட்டறிந்தார். பின்னர் அந்த பெண் தான் வைத்திருந்த மனுவை அவரிடம் அளித்தார். அதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக கூறி விட்டு சென்றார்.
பின்னர் இந்திரா கூறுகையில், எனது கணவர் இறந்து விட்டார். மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் எங்களுக்கு சொந்தமான நிலத்தை, எனது கணவரின் சகோதரர் அபகரித்துக்கொண்டு தர மறுக்கிறார். எங்களுக்கு சொந்தமான மனையில் உள்ள வீட்டை சரி செய்ய சென்ற எனது மகன் மீது பாப்பாநாடு போலீசில் பொய் புகாரினை அளித்தனர்.
எனது மகன் நேரில் சென்று விளக்கம் அளித்த பின்னர் போலீஸார் வழக்குப்பதிவு செய்யவில்லை. மேலும் என்னையும் தாக்கினர். இதனால் நான் தஞ்சாவூர் கூலி வேலை செய்து வசித்து வருகிறேன். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.