கடலூர் அடுத்த தேவனாம்பட்டினம் பகுதியை சார்ந்தவர் உதயகுமார். 27 வயதான இவர் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு வயிற்றுப் பகுதியில் வலி ஏற்பட்டதையடுத்து குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 8 ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்து நள்ளிரவு திடீரென உதயகுமாருக்கு மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில் அதிகாலை உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் அரசு மருத்துவமனை முன் குவிந்து மருத்துவரின் தவறான சிகிச்சையால் தான் உதயகுமார் உயிரிழந்ததாக கூறி முற்றுகையிட்டனர்.
மேலும் பணியில் இருந்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி மருத்துவமனை முன் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் குவிந்துள்ளனர். தகவலறிந்து வந்த துணைக்காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர் மற்றும் போலீஸார் மருத்துவமனை முன் குவிந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது குறித்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்