பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் கோவிலை புனரமைப்பதாக கூறி ரூ34 லட்சம் வசூலித்து மோசடி செய்ததாக பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது.
இக்கோவில் சிலைகளை கடந்த ஆண்டு மர்ம நபர்கள் உடைத்ததாக எழுந்த புகாரால் பெரும் சர்ச்சை வெடித்தது. அப்போது மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஆனால் மாற்று மதத்தினர்தான் கோவில் சிலைகளை இடித்து தள்ளியதாக இந்து அமைப்பினர் புகார் தெரிவித்தனர். அத்துடன் பாஜக ஆதரவாளரும் யூ டியூபருமான கார்த்திக் கோபிநாத் என்பவர் இணையம் மூலம் சிறுவாச்சூர் கோவிலை புனரமைக்கப் போவதாக கூறி நிதி வசூல் செய்தார்.
கார்த்திக் கோபிநாத் கைது கார்த்தி கோபிநாத் மொத்தம் ரூ34 லட்சம் வசூல் செய்ததாகவும் இத்தொகையில் அவர் மோசடி செய்ததாகவும் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை ஆவடி போலீசார் கார்த்தி கோபிநாத்தை கைது செய்தனர். அவரிடம் இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கார்த்திக் கோபிநாத்தின் கூட்டாளிகள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
அண்ணாமலை கண்டனம் கார்த்திக் கோபிநாத் கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தமது ட்விட்டர் பதில், தங்களுக்கு எதிரான குரல்களை ஒடுக்க திமுக அரசு முயற்சிக்கிறது. கார்த்திக் கோபிநாத்தின் தந்தையிடம் நான் பேசினேன். கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக நிற்போம். தமிழக பாஜகவின் சட்டக் குழுவினர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக இருப்பார்கள் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இதில் வியக்குக்குரிய விஷயம் கார்த்திக் கோபிநாத் குறித்து ஆரம்பத்தில் இந்த குற்றச்சாட்டு எழுந்தபோது பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில், கார்த்திக் கோபிநாத் குறித்து கேள்வி எழுப்பிய நிருபரிடம் கார்த்திக் கோபிநாத் என்றால் யார் எனவும்,அவரை பற்றி தெரியாது எனவும் அண்ணாமலை கூறியிருந்தார்.அவர் தற்போது கார்த்திக் கைதுக்கு கண்டனம் தெரிவித்திருப்பது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. மேலும், தற்போது அவர் கார்த்திக் கோபிநாத்துடன் இருக்கும் புகைப்படமும், அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் தெரியாது என கேட்கும் வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.