தனுஷ் நடிக்கும் படத்தில் கலந்துகொண்ட தென்னிந்தியாவின் பிரபல நடிகரான பிரகாஷ் ராஜுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
குணச்சித்திரம், வில்லன் என பல்வேறு வேடங்களில் நடித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது கேஜிஎஃப் 2’, அண்ணாத்த, பொன்னியின் செல்வன், அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’, மாறன் உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
நடிகர் தனுஷ் ‘திருச்சிற்றம்பலம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தனுஷின் 44 வது படமான இப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பாரதிராஜா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் கீழே விழுந்ததில் அவருக்கு தோள்பட்டையில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் இதனையடுத்து அறுவை சிகிச்சைக்காக ஹைதராபாத் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
இது தொடர்பாக பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் “சின்னதா விழுந்துட்டேன், சின்னதா எலும்பு முறிவு ஏற்பட்டுருக்கு, சிறிய அறுவை சிகிச்சைக்காக ஹைதராபாத்துக்கு செல்கிறேன், எனது நண்பரான மருத்துவர் குருவாரெட்டியிடம் பாதுகாப்பான கரங்களில் சிகிச்சை பெற்று திரும்பி வருவேன். நான் நன்றாக இருப்பேன் கவலைப்படாதீங்க. உங்களின் நினைவுகளின் என்னை வைத்திருங்கள்” என மிகவும் உணர்ச்சிகரமாக பதிவிட்டுள்ளார்.