ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா உலக தரவரிசையில் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் இறுதிப்போட்டியில் தனது முதல் முயற்சியிலேயே 87.03 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து பிரமிக்க வைத்த நீரஜ் சோப்ரா, தங்கப்பதக்கத்தை இந்தியாவுக்காக தன்வசப்படித்தினார்.
இதனையடுத்து டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்க பதக்கத்தை தனதாக்கிய நீரஜ் சோப்ராவுக்கு ரசிகர்களும் பிரபலங்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் அவருக்கு அரசு சார்பிலும் தனியார் சார்பிலும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம், உலகத் தடகள வரிசையில் ஈட்டி எறிதலில் 14 இடங்கள் முன்னேறி 2-வது இடத்துக்கு இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அபாரமாக முன்னேறியுள்ளார்.
உலகத் தரவரிசையில் முதலிடத்தில் ஜெர்மன் வீரர் ஜோஹன்னாஸ் வெட்டர் 1,396 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 1,315 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் 120 ஆண்டுகளில் ஈட்டி எறிதலில் இந்தியா பெற்ற முதல் தங்கப் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.