ஒடிசா தலைநகரில் நடைபெற்ற சர்வதேச கால்பந்து தொடரின் (இன்டர்கான்டினென்டல் கோப்பை) இறுதிப்போட்டியில் லெபனானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ருபாய் 1 கோடி பரிசு அறிவித்துள்ளார்.
ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் சர்வதேச கால்பந்து போட்டி (இன்டர்கான்டினென்டல் கோப்பை) கடந்த 9 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் இந்தியா, லெபனான், வனாட்டு, மங்கோலியா உள்ளிட்ட திறமையான அணிகள் கலந்து கொண்டு அவரவர் திறமைகளை காட்டினர்.
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற லீக் சுற்றுகள் முடிவில் முதல் 2 இடங்களை எட்டி பிடித்த இந்தியாவும், லெபனானும் நேற்றிரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் களம் கண்டது .
பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 46-வது நிமிடத்தில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்து ரசிகர்களை இன்ப மழையில் ஆழ்த்தினார். இது சர்வதேச போட்டியில் சுனில் சேத்ரியின் 87-வது கோலாகும். 65-வது நிமிடத்தில் மற்றொரு இந்திய வீரரான லாலியன்ஜூலா சாங்தே கோல் அடித்து அசத்தினார் .
இறுதியில் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் லெபனானை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது .
இந்த போட்டியில் அட்டகாசமான வெற்றியை வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், சாம்பியன்ஸ் கோப்பையை வழங்கினார். இதுமட்டுமல்லாமல் இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என அவர் அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து ஒடிசா முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிருப்பதாவது :
நாட்டிற்கு பெருமை சேர்த்த இந்திய வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்ட முதலமைச்சர் நவீன் பட்நாயக், இந்த கவுரவமிக்க இன்டர்கான்டினென்டல் கோப்பைக்கான போட்டியை நடத்தியதில் ஒடிசாவுக்கு பெரிய பெருமை என்றும் இந்தியாவில் விளையாட்டுக்கான வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்றும் தெரிவித்துள்ளார் .
இந்நிலையில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணி தாய் நாட்டிற்கு மேலும் பல சாதனைகளை புரிந்து பெருமை சேர்க்க வேண்டுமென நாட்டின் பிரதமர் உளப்பட பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் .