அக்கா சப்பாத்தி கொடுக்காமல் சாப்பிட்டதால் ஏமாற்றம் அடைந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் தங்கை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த மேலபெருவிளையை சேர்ந்தவர்கள் கணேசன், தங்கமணி தம்பதிகள். இவர்களுக்கு 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள்கள் இருவருக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில், மகன் சென்னையில் பணிபுரிந்து வருகிறார்.
இளைய மகள்கள் இருவரும் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பும், 10ஆம் வகுப்பும் படிக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய 10ஆம் வகுப்பு படிக்கும் கடைசி மகள் தாயிடம் சாப்பாடு கேட்டுள்ளார். அதற்கு சமையல் அறையில் உள்ள சப்பாத்தியை எடுத்துச் சாப்பிடுமாறு தாய் கூறியதும் அங்கு சென்று பார்த்தபோது, அக்கா சப்பாத்தியைச் சாப்பிட்டுக்கொண்டு இருந்திருக்கிறார்.
அதைப் பார்த்த தங்கை அக்காவிடம் மிச்சம் இருந்த சப்பாத்தியையாவது தனக்குத் தருமாறு கேட்க அக்கா அதைக் கொடுக்க மறுத்து மீதி சப்பாத்தியையும் சாப்பிட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த தங்கை அறைக்குள் சென்று கதவை பூட்டி உள்ளார்.
அதனை அடுத்து சிறுமியின் தாய், பலமுறை கதவைத் தட்டிக் கூப்பிட்டும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறையின் மேற்புறத்தில் இருந்த ஓட்டைப் பிரித்துப் பார்த்துள்ளனர். அப்போது சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயல்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சிறுமி திங்கட்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அறிந்து வந்த ஆசாரிப்பள்ளம் போலீசார் இறந்த சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.