பழனி வனப்பகுதியில் காட்டுப்பன்றி, மான், முயல், காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகிறது. வனப்பகுதி முழுவதும் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பொந்துபுலி என்ற வனப்பகுதியில் முயல்கள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ரோந்து பணியில் பழனி வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
அப்போது முயலை வேட்டையாடிய பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காந்தி ( 65 ). மாரிமுத்து (55) இருவரையும் வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
வேட்டையாட பயன்படுத்திய வலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்து முயல்களை வேட்டையாடிய இருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
வேட்டைக்குச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டது குறித்து தகவல் அறிந்து அவர்களின் உறவினர்கள் பழனி வனத்துறை அலுவலகம் முன்பு குவிந்தனர். அவர்களை சந்தித்த வனசரகர் வனவிலங்குகளின் முக்கியத்துவம் குறித்தும், வேட்டையாடுவது தவறு என்பதை எடுத்துக் கூறியும் எச்சரித்து அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைத்தார்.