கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி சிப்காட் தொழில் பூங்காவில் செயல்பட்டு வரும் டெல்டா என்கிற தனியார் நிறுவனத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர்கள் மற்றும் 2000-க்கும் மேற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று நிறுவனத்தில் பணிபுரியும் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கிருஷ்ணகிரியில் உள்ள சிக்கன் ரைஸ் கடையிலிருந்து சிக்கன் ரைஸ் வாங்கி வந்து பணி செய்யும் இடத்தில் வைத்து சாப்பிட்டுள்ளனர்.
அப்போது சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர்களில் 26 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக, பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சம்மந்தப்பட்ட சிக்கன் ரைஸ் கடையில் இருந்து முதற்கட்டமாக உணவுப் பொருட்களை கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர்.
மேலும் சிக்கன் ரைஸ் கடை உரிமையாளர் மீது குருபரபள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.