பட்டினியால் 5 வயது குழந்தை இறந்து கிடந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 15-ஆம் தேதி விழுப்புரத்தில் மேல் தெரு என்ற இடத்தில் சிவகுரு என்பவருக்கு சொந்தமான நான்கு சக்கர தள்ளுவண்டி 5 வயது மதிக்கதக்க ஆண் குழந்தை ஒன்று உறங்கிய நிலையில் கிடந்துள்ளது.
குழந்தை தூங்குவதாக நினைத்து அக்கம்பக்கத்தினர் குழந்தையை தட்டி எழுப்ப முயற்சித்தபோது குழந்தை அசைவின்றி கிடந்துள்ளது. இதனால் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்ததில் குழந்தை இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து குழந்தையின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் குழந்தையின் புகைப்படத்தை காட்டி அங்குள்ள அனைத்து வீடுகளிலும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஐந்து வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ததில் குழந்தை உணவு இல்லாமலும் தண்ணீர் இல்லாமலும் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தை யாருடையது? அங்கு எப்படி வந்தது? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பட்டினியால் ஒரு பிஞ்சு குழந்தை மரணிக்கும் அளவிற்கு மாநிலம் மோசமானதாக மாறிவிட்டதா என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.