ஐ தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.
அன்பாக, ஆதரவாக, அரவணைக்கும் தாய்மார்கள், வீட்டுக்கு வீடு இருந்தபோதிலும், அந்த தலத்தைச் சுற்றி சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள கிராம மக்கள் அனைவருக்கும் தாயாகத் திகழ்பவள்தான் ஸ்ரீ முத்து மாரியம்மன்.
“திருமணமா … வளைகாப்பா… குழந்தைகளின் காதணி விழாவா.. சுப காரியங்கள் எதுவானாலும், அதனை சுபமாக முடித்து வைப்பாள் சேண்டிருப்பு மாரியம்மா” என்ற நம்பிக்கைதான் பக்தர்களை, அவர்களின் அனைத்து குடும்ப விழாக்களையும் இத்தலத்தில் நிகழ்த்த வைக்கிறது.
அம்மனின் தாய்மடியான வேப்ப மரத்தில் சுயம்புவாய் தோன்றி, பக்தர்களை, குறிப்பாக பெண்களை, பக்தி பரவசத்துடன் ஈர்க்கும் சக்திபீடமாய் உருவெடுத்திருக்கும் திருத்தலம், மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே சேண்டிருப்பு கிராமத்தில் அமைந்திருக்கிறது.
அகிலத்தை காக்கும் பரம்பொருளான பராசக்தி உறையும் இந்த ஆலயத்திற்கு, உங்களை அழைத்துச் செல்வதில் ஐ தமிழ் மகிழ்ச்சி கொள்கிறது.
பசுமை போர்த்தியிருக்கும் நெல் வயல்கள், அடர்ந்து நிற்கும் உயர்ந்த மரங்கள், தென்னை, வாழை, கரும்பு என காட்சியளிக்கும் சுற்றுப்புறச் சூழலின் நடுவே, தலவிருட்சமாய், மாரியம்மாவின் மறு உருவமாய் வீற்றிருக்கும் வேப்பமரத்தின் அடியில், சுயம்புவாய்த் தோன்றிய ஆதி முத்துமாரியம்மன் அமர்ந்திருக்கிறாள்.
அருகில் சிறிய சந்நதியில் ஸ்ரீ ரத்னபுரீஸ்வரர் அருள்பாலிக்க, வலப்புறம் ஸ்ரீ முத்துவிநாயகர்,
இடப்புறம் வள்ளி தெய்வானையுடன் முத்துக்குமாரசாமி, நடுவில் கருணை வடிவாய் கம்பீரமாய் ஸ்ரீ முத்து மாரியம்மன் வீற்றிருக்கிறாள். எதிரில் சூலம், பலிபீடம், கொடிமரம்,தீர்த்தகுளம், பேச்சியம்மன்,உற்சவ மாரியம்மன், நவக்கிரகங்கள் அமையப்பெற்றுள்ளன.
குறுகிய காலத்தில் இந்த ஆலயம் உருவான, வியப்பூட்டும் வரலாறை தெரிந்துகொள்வோம்.
இக்கோயிலை தற்போது நிர்வகித்து வரும் மகாலிங்கம், தனது தந்தை சண்முகம் கூறியதை அப்படியே நம்மிடம் பகிர்ந்தார்.
“ஆரம்ப காலத்தில் நான் கடவுள் மறுப்புக் கொள்கை உடையவன். என்றாலும் 1976-ம் ஆண்டு தஞ்சையில் உள்ள பேச்சிமுத்துசாமி அவர்களிடம் அருள்வாக்கு கேட்க ,எனது தம்பி தட்சிணமுர்த்தி என்னை வலிய அழைத்துச் சென்றார். சாமி கூறும் போது ” உன்னுடைய வயலில் ஒரு வேப்பமரமும், அதனடியில் புற்றும் இருக்கிறது. அந்த இடத்தில் ஓர் ஆலயம் கட்டுமாறு கேட்டு அம்பாள் வந்திருக்கிறாள். அவளுக்கு ஒர் கல் நிறுத்தி வணங்கி வந்தால், அவளைவிட சக்தி வாய்ந்த தெய்வம் வேறில்லை” என்று கூறி ஆசி வழங்கினார். ஆனால் அதனை நான் ஏற்கவில்லை.
அதன்பின் ஒருமுறை கைரேகை பார்ப்பவர்” எவ்வளவுதான் நீங்கள் தெய்வத்தை ஏற்க மறுத்து பேசினாலும் , ஒருநாள் நீங்களே ஒருகோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்வீர்கள்” என்று ஆணித்தரமாகக் கூறினார்.நான் நக்கலாய் சிரித்தேன்.செய்யவில்லை.
1986 -ம் வருடம் என் வயலில் மிளகாய்ப் பயிரிட்டுருந்தேன் தினமும் சுமார் 50 பெண்கள் வேலை செய்வார்கள். அந்த வயலில் அமைந்திருந்த ஒர் வேப்பமரமும், அதனடியில் ஒர் புற்றும் இருந்தது. அவ்விடம் வரும் பெண்களில் யாருக்காவது, ஒருவர் மேல் சாமி வந்து ஆடி, வேப்பமரத்தடியில் கோயில் கட்ட சொல்வார்கள். இது தினமும் நடக்கும் வாடிக்கையாக இருந்தது.அது எனக்கு வேடிக்கையாகத் தெரிந்தது.
சுசிலா என்கிற ஹரிஐனப் பெண் திடீரென சாமியாடி ”இந்த வருடம் அவனுக்கு மிளகாய் உற்பத்தியில் அதிக வருமானம் கொடுத்தேன், நான் இப்படி அள்ளி அள்ளி கொடுக்கும் போதும், எனக்கு விளக்கேற்ற ஒரு கோயில் பயப்படுகிறான்” என்று சொன்னாள்.
இதையும் படிங்க : தீராத வினைகள் தீர்க்கும் திருமயிலாடி முருகப்பெருமான் ஆலயம்!
இதை கேள்விப்பட்ட நான், “அந்த வேப்பமரம் வயல் நடுவே இருப்பதால் யாரும் அவ்விடம் வந்து வணங்க மாட்டார்கள். வேண்டுமானால் சாலையோரம் சின்ன கோயிலாகக் கட்டினால், வழியில் வந்து போவோர் சாமி கும்பிடுவார்கள்” என்று நண்பர் ஒருவரிடம் கூறினேன்.
மறுநாள் அந்த அம்மாள் ”என்னை கிழக்கே கொண்டு போகலாமா…. மேற்கே கொண்டு போகலாமா…. என்று வயல்காரன் நினைக்கிறான். எனக்கு இந்த இடம்தான் வேண்டும் என்று ஓரிடத்தைச் சுற்றி ஒடி வந்ததாகக் கூறினார்கள்.
பிறகு 200 கற்களை கொண்டு, விளக்கு ஏற்ற சிறிய மண்டபமாக கட்டலாமா என்று யோசித்து, ஒரு அம்மன் சிலையை வாங்கி வீட்டில் வைத்தேன்.ஆனால் கோயில் கட்டவில்லை.
மறுநாள் அந்த பெண் சாமியாடி ”நான் விளைச்சலைப் பெருக்கி லட்சம் லட்சமாக அவனுக்கு பொருள் ஈட்டித் தருகிறேன். அவன் கோயில் கட்டத் தயங்குறான். எனக்கு கோயில் கட்டி அபிஷேகம் செய்தால், பால் பொங்குவதுபோல் அவன் குடும்பம் சுபிட்சத்தால் பொங்கும்” என்று கூறினார். அப்போதும் கோயில் கட்ட எண்ணமில்லை.
ஒருநாள் இரவு, திடீரென என் மகன், மயக்கமுற்று வீழ்ந்து, கண்கள் சொருகி, இறந்து வி்ட்டவன்போல் கிடந்தான்.எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அனைவரும் அழுது வீடே துக்கவீடுபோல் ஆகிவிட்டது.
இதுநாள் வரை சாமி கும்பிடாத நான் மிகுந்த வேதனையுடன், என்னையும் அறியாமல், எங்கள் வீட்டில் வாங்கி வைத்திருந்த அம்மன் சிலையை கட்டிப் பிடித்து கொண்டு, வாயில் வந்ததையெல்லாம் சொல்லி, “அம்மாவே எப்படியாவது என் மகனை காப்பாற்று” என்று கதறினேன். சிறிது நேரத்தில் எனக்கு அம்பாளின் உருவம் கண்களில் தெரிந்தது.
“நான் உன் மகனை காப்பாற்றித் தருகிறேன். நீ நிம்மதியாக இரு” என்று அசரீரிபோல் கூறியது. சிலிர்ப்புடன் எழுந்து, உடனே மகனை போய் பார்த்தேன்.அவன் உடம்பில் அசைவு தெரிந்தது. மெள்ள மெள்ள தூங்கி முழிப்பவன்போல் எழுந்து அமர்ந்தான். அனைவருக்கும் அதிர்ச்சி. ஆனந்தம்.எல்லாம் அந்த அம்பாளின் அற்புதமே” என்று உணர்ந்தோம்.
மறுநாள் முதல், நான் ஏதோ ஒரு சக்தியால் கட்டுண்டவன் போல் இருந்தேன்.கோயில் கட்ட திடமான முடிவெடுத்தேன். மற்றவர்களிடம் வசூல் செய்ய வெட்கப்பட்டு, என் பொருளாதாரத்துக்கேற்ப 5 அடிக்கு 5 அடி என்ற கணக்கில் ஓர் சிறிய கோயிலைக் கட்டினேன்.தினமும் மனமுருகி வழிபட்டேன். சிறிதுநாள் சென்றவுடன் அருள்வாக்கு சொல்லும் அனுக்கிரகத்தைப் பெற்றேன்.அம்பாள் அருளால் கோயிலுக்கு வந்து கேட்போருக்கு சொல்வதுண்டு. இன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வேண்டுதல்கள் நிறைவேறி பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். இந்த அம்பாள் சுயம்புவாக தோன்றியவள். வழிபடுவோர் குடும்பத்தை வாழவைப்பவள்.இது உறுதி ” என்றாராம்.
வாரந்தோறும் திங்கட்கிழமை ராகு காலத்தில் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும், வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12 மணிக்கு நடைபெறும் அபிஷேகத்தில் பங்கேற்று பிரார்த்தனை செய்வதும், வெள்ளிக்கிழமை இரவில் கோயில் வளாகத்தில் படுத்து உறங்கி, மறுநாள் காலை 21 முறை அம்பாள் சந்நதியை வலம் வந்து வணங்கி வழிபடுவதும், இத்தலத்தில் வழக்கமாக இருக்கிறது. மேலும் மாதந்தோறும் பௌர்ணமி நாளில் மதியம் 12 மணிக்கு நடைபெறும் ஆதி முத்துமாரியம்மனுக்கும், புற்றுக்கும் நடைபெறும் அபிஷேக அர்ச்சனையில் பங்கு கொண்டு தேங்காய் உடைத்து, அந்த தேங்காயில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், எண்ணிய காரியம் எதுவாயினும் அது நிறைவேறுவது உறுதி என்கிறார் செந்தில் சிவாச்சாரியார்.
மீண்டும் ஒர் அற்புத ஆலயத்தில் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுவது ஐ தமிழ் !