ஓரகடம் அருகே 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வரும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியில் கார் உள்ளிட்ட பல்வேறு எந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று தொழிற்சாலையில் வழக்கம் போல தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென தொழிற்சாலையின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
தொடர்ந்து சிறிது நேரத்தில் பரவத் தொடங்கிய தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்து கொண்டு தொழிசாலையை விட்டு வெளியே ஓடிச் சென்றனர்.
இந்த விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு வீரா்கள் மற்றும் ஒரகடம் தொழிற்பேட்டை அருகே உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தீயணைப்பு வாகனங்கள் சேர்ந்து தொழிற்சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும், இந்த தகவல் அறிந்த ஓரகடம் காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்து குறித்து விசாரணையை தொடங்கினார். இதனிடையே தொழிற்சாலை பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருந்தது.
இந்நிலையில், சுமார் 1½ மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு வீரா்கள் தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை முற்றிலும் அணைத்தனர்.
தொடர்ந்து, தொழிற்சாலையில் இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது? தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் பாய்லர் வெடித்து தீ ஏற்பட்டதா? இல்லை வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து ஓரகடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு பின்பு தீ விபத்துக்கான காரணம் மற்றும் இந்த தீ விபத்தில் சேதமடைந்த பொருட்கள் குறித்த விவரம் தெரியவரும். மேலும், இந்த தீ விபத்தால் ஓரகடம், வடக்குப்பட்டு சுற்றுவட்டார பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
தொழிற்சாலைகள் நிறைந்த இந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.